தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்கிறது. அதிலும் குறிப்பாக, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு, மரங்கள் விழுந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (24.10.2026) மற்றும் நாளை (25.10.2026) நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களாக, மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக உதகை செல்லும் மலைப்பாதைப் பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு அரசு பேருந்துகள் உட்பட அனைத்து வாகனப் போக்குவரத்தும் மாலை 6:00 மணி முதல் காலை 7:00 மணி வரை இரவு நேரப் போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது; எனினும் அத்தியாவசிய மற்றும் அவசர வாகனங்களுக்கு இதில் விலக்கு உண்டு. நீர்வீழ்ச்சிகள், ஆறுகள், ஓடைகள், ஏரிகள் மற்றும் அணைகள் போன்ற நீர்நிலைகளுக்குச் செல்லவோ, குளிக்கவோ கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மரங்களின் அடியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்றும், மழை பெய்யும் போது மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளைத் தொடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவசரக் காலங்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள 24 மணி நேர அவசரக் கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கட்டணமில்லா எண் 1077 மற்றும் மாவட்ட அவசரகால மைய எண்கள் 0423-2450034, 0423-2450035 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம். கோட்ட அளவிலான எண்களாக உதகைக்கு 0423-2445577, குன்னூருக்கு 0423-2206002, கூடலூருக்கு 04262-261296 ஆகிய எண்களும், வட்ட அளவிலான எண்களாக உதகைக்கு 0423-2442433, குன்னூருக்கு 0423-2206102, கோத்தகிரிக்கு 04266-271718, குந்தாவிற்கு 0423-2508123, கூடலூருக்கு 04262-261252, பந்தலூருக்கு 04262-220734 ஆகிய எண்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட மண் சரிவு சீர்செய்தல் மற்றும் மரங்களை அகற்றும் பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
