திருவனந்தபுரம்: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுப்பதிவும், பெண்களுக்கான ஓட்டுப்பதிவு சதவீதம்

திருவனந்தபுரம்: 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுப்பதிவும், பெண்களுக்கான ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பும் கேரளாவில் ஆளும் இடது முன்னணி யையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியையும் கலங்கடித்துள்ளது.

கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 78.27 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கடந்த தேர்தலை விட இது மூன்று சதவீதம் அதிகம். இம்முறையும் வெற்றி பெற்று பினராய் விஜயனின் 3.0 அரசு அமையும் என்று இடதுசாரி கூட்டணியினர் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் தங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும், ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என்றும் காங்கிரஸ் கூட்டணி கூறி வருகிறது. எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது தொங்கு சட்ட சபை அமையும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்தது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து அனைத்து கட்சிகளும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக 44 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த தேர்தலில் மிகக்குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் முடிவுகள் அமைந்தது. ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகரித்தது யாருக்கு பாதகமாக அமையும் என்பதில் அரசியல் கட்சிகளிடம் குழப்பம் உள்ளது.

ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பு தான் அதிக ஓட்டுப்பதிவுக்கு காரணம் என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் கூடுதல் ஓட்டுகள் பதிவானது தங்களுக்கு சாதகமாக அமையும் என்று இடதுசாரி கூட்டணி கூறுகிறது.

மா.கம்யூ., வில் அதிருப்தி ஏற்பட்டு விலகிய தலைவர்கள் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் 80 சதவீதத்திற்கும் கூடுதலான ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது ஆளுங்கட்சிக்கு எதிரான நிலை என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூறுகிறது.

அம்பலப்புழாவில் முன்னாள் அமைச்சர் சுதாகரன், மலம்புழாவில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனின் உதவியாளர் சுரேஷ்குமார், பையனூரில் மூத்த தலைவர் கொஞ்சிக் கிருஷ்ணன்,தனிப்பரம்பில் மூத்த தலைவர் கோவிந்தன் ஆகியோர் காங்கிரஸ் ஆதரவுடன் போட்டியிட்டனர்.

பெண்களின் ஓட்டுப்பதிவு சதவீதமும் அதிகரித்துள்ளது. 2021 தேர்தலை ஒப்பிடும்போது 7.25 சதவீதமும், 2024 பார்லிமென்ட் தேர்தலை ஒப்பிடும்போது 10 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதனால் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் குழம்பி போய் உள்ளன.

Source link