உலக போலியோ தினத்தை முன்னிட்டு, போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அரசு சார்பில் போலியோ ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தப் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகனங்களில் பங்கேற்று, ‘உடலை ஊனமாக்கும் போலியோவே உலகத்தை விட்டே வெளியேறு’ உள்ளிட்ட விழிப்புணர்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, டீச்சர்ஸ் காலனி, குமலன்குட்டை, பழைய பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று, ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நிறைவுபெறுகிறது. போலியோ நோயை முற்றிலும் ஒழித்து, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
