பசும்பொன்னில் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்த நாள் விழா மற்றும் 64வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி (30.10.2026) நடைபெற உள்ளது. இந்நாளையொட்டி தமிழக முதலமைச்சராகப் பதவி வகிப்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். அதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம்  மாவட்டம் பசும்பொன்னிற்குச் சென்று அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

இத்தகைய சூழலில் தான் த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சரான பிறகு முதல்முறையாக அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன்னிற்குச் சென்று முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் நேரடியாக மரியாதை செலுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அரசு மற்றும் காவல்துறை தரப்பில் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம்: பசும்பொன்னில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரும், படைத்தலைவருமான மகேஷ் குமார் அகர்வால் இன்று (24.10.2026) நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ள பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவிற்கான , பாதுகாப்பு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார். 

அதோடு, கமுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் திட்டம், போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த பாதுகாப்பு பணிக்காக 7 டிஐஜிக்கள், 40 எஸ்பி-க்கள் மற்றும் 18,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 118 வாகனச் சோதனைச் சாவடிகள், 480 உயர்தர கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன்கள் மற்றும் 460-க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.