வதோதரா: முதல் ஒருநாள் போட்டியில் பிரதிகா ராவல் சதம், ஷபாலி வர்மா அரைசதம் விளாச, இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது.
இந்தியா வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. நேற்று, குஜராத்தின் வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. இந்திய ‘லெவன்’ அணியில் ஜின்டிமணி கலிதா அறிமுகமானார். ‘டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் நோம்வெலோ சிபாண்டா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.
ஸ்ரீ சரணி அசத்தல்
ஜிம்பாப்வே அணிக்கு முபசிக்வா (25), சிபோ முகேரி–திரிபானோ (21), மாவுங்கா (29) ஆறுதல் தந்தனர். பிசா (62) அரைசதம் கடந்தார். ஷார்ன் மேயர்ஸ் (8), கேப்டன் சிபாாண்டா (2) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் 197 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. இந்தியா சார்பில் ஸ்ரீ சரணி 4, கிராந்தி கவுட் 3, தீப்தி சர்மா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பிரதிகா அபாரம்
சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பிரதிகா ராவல், கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்த போது ஸ்மிருதி மந்தனா (32) அவுட்டானார். பின் இணைந்த பிரதிகா, ஷபாலி வர்மா ஜோடி கைகொடுத்தது. ஒலிண்டர் பந்தில் வரிசையாக 2 சிக்சர் விளாசிய ஷபாலி வர்மா, 29 பந்தில் அரைசதம் கடந்தார். டென்டாய் மகுஷா பந்தில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த பிரதிகா, ஒருநாள் போட்டி அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். நியாஷா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷபாலி வர்மா வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 27.1 ஓவரில் 200/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. பிரதிகா (100* ரன், 96 பந்து, 15X4), ஷபாலி (64* ரன், 33 பந்து, 4X6, 5X4) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகி விருதை பிரதிகா வென்றார்.
