எழுதியவர்:Ashish Shaji
கருவில் வளரும் குழந்தைக்கு கடுமையான குறைபாடுகள் இருப்பது ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து, 24 வாரங்களுக்கு மேலான கர்ப்பத்தை கலைக்க பெண் ஒருவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. இதுபோன்ற ஒரு குழந்தையை உலகிற்கு கொண்டு வர வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் உரிமை தாய்க்கு மட்டுமே உள்ளது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, கர்ப்பத்தை கலைக்க ஒப்புதல் அளிக்க மறுத்த மருத்துவக் குழுவின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில், ஸ்கேன் அறிக்கைகள் கருவில் உள்ள குழந்தையின் கடுமையான குறைபாடுகளை தெளிவாகக் காட்டுகின்றன என்று தெரிவித்த நீதிமன்றம், குறிப்பாக குழந்தை இயல்பான வாழ்க்கையை வாழ முடியாது என்னும் சூழ்நிலையில், அத்தகைய குழந்தையை உலகிற்கு கொண்டு வர வேண்டுமா என்பதை முடிவு செய்யும் உரிமை தாய்க்கு உண்டு என்று குறிப்பிட்டது.
முன்னதாக, அந்தப் பெண் தாக்கல் செய்த மனுவில், தமக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் அறிக்கையில் கருவுக்கு மூளை நீர்த்தேக்கக் குறைபாடு இருப்பது தெரியவந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ ஆவணங்களின்படி, இந்த பாதிப்புடன் பிறக்கும் குழந்தைக்கு பேச்சு மற்றும் மொழித் திறன் தாமதம், கற்றல் குறைபாடுகள், அறிவாற்றல் கோளாறு, நடத்தை சார்ந்த சிக்கல்கள், தகவல் தொடர்புத் திறன் குறைபாடு, வலிப்பு நோய் மற்றும் அறிவுசார் இயலாமை உள்ளிட்ட வளர்ச்சி சார்ந்த பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
பிறக்கப்போகும் குழந்தை குறைபாடுகளுடன் பிறக்கும் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியதால், கர்ப்பத்தை கலைக்க அந்தப் பெண்ணும் அவரது கணவரும் முடிவெடுத்தனர். இதனையடுத்து அப்பெண் மருத்துவக் குழுவிடம் அனுப்பப்பட்டார். ஆனால், மூளை நரம்பியல் சார்ந்த இந்தக் குறைபாடுகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்ற காரணத்தைக் கூறி, கர்ப்பத்தை கலைக்க மருத்துவக் குழு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இந்த முடிவை எதிர்த்து, கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
விசாரணையின் தொடக்கத்தில், ஸ்கேன் அறிக்கைகள் கடுமையான கருக் குறைபாடுகளை தெளிவாக வெளிப்படுத்துவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. ஒரு குழந்தை கண்ணியமான மற்றும் சுயசார்பு கொண்ட வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பில் உள்ள பெரும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, அந்தத் தாய் எடுத்த இந்த “வேதனையான மற்றும் தீவிரமான” முடிவிற்கு மதிப்பளிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
அத்தகைய குழந்தை அனுபவிக்கும் துன்பங்களை பெற்றோர்கள் தான் தினமும் பார்க்க வேண்டியிருக்கும் என்றும், அந்தக் குழந்தை கண்ணியமற்ற வாழ்க்கையை வாழக் கூடாது என்பதற்காகவே பெற்றோர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், பிறக்காத குழந்தைக்கும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை உண்டு என்றும், அது மற்றவர்களின் கேலிப்பொருளாக மாறக்கூடாது என்றும் தெரிவித்த நீதிமன்றம், பெற்றோரின் ஆயுட்காலத்திற்குப் பிறகு இந்தக் குழந்தையின் வாழ்க்கை என்னவாகும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியது.
முந்தைய நீதித்துறைத் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும், ஸ்கேன் அறிக்கைகளைக் கவனத்தில் கொண்டும், கர்ப்பத்தைக் கலைக்க மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், மருத்துவ ஆவணங்களின்படி அப்பெண்ணின் கர்ப்பத்தைக் கலைக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. மேலும், பதிவுபெற்ற மருத்துவப் பயிற்சி பெற்ற மருத்துவரைக் கொண்டே இந்த கர்ப்பக் கலைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
