தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரவேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையமானது தமிழ்நாட்டிற்கான அடுத்த 7 நாட்களுக்கான முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகின்ற 25.10.2026 மற்றும் 26.10.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களில் திண்டுக்கல் மாவட்டத்தில், குறிப்பாக கொடைக்கானல் மலைக்கிராமங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் நிலச்சரிவு, மண்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வானிலை ஆய்வுத்துறையின் எச்சரிக்கையினை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (24.10.2026) இரவு 10.00 மணி முதல் 25.10.2026 காலை 07.00 மணி வரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் யாரும் கொடைக்கானல் மலைப்பாதை பகுதியில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, கொடைக்கானலில் உள்ள குணா குகை. பைன் காடு, தூண் பாறை. மோயர் பாயிண்ட், மன்னவனூர். பிரையன்ட் பூங்கா. கோக்கர்ஸ் வாக், சில்வர் கேஸ்கேட் அருவி, பேரிஜம் ஏரி, கிரீன் வேலி வியூ, டால்பின்ஸ் நோஸ், பேரி அருவி ஆகிய அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் உடனடியாக மூடப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த நாட்களில் கொடைக்கானலுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும். ஏற்கனவே அங்கு உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
