அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் அவருடன் பல ஈரான் ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளவாடங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்த போர் ஒரு மாதங்களைக் கடந்தும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
இந்த போர் பதற்றம் காரணமாக, ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் தடுத்து நிறுத்தியது. இதனால், உலக கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகின் பல்வேறு நாடுகள் எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இதன் விளைவாக, உலக பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த ஹார்மோஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், ட்ரம்பின் எச்சரிக்கையை ஈரான் பொருட்படுத்தவில்லை.
இந்த சூழலில், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதாவது ஈரானுடனான தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் கோரிக்கை வைத்ததாலும், ஹார்மூஸ் நீரிணையை ஈரான் திறக்க ஒப்புக்கொள்வதாலும் ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே பாகிஸ்தானில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இன்று (11-04-26) பாகிஸ்தான் சென்றார். அவரை ராணுவத் தலைமை தளபதி ஆசிம் முனீர், அமைச்சர்கள் மோஹ்சின் நக்வி, ஐசக் தார் ஆகியோர் வரவேற்றனர். இதில் போர் நிறுத்தம், ஹார்மூஸ் நீரிணை போன்ற பிரச்சனை தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது. லெபனான் மீதான இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் அனைத்து நிறுத்தப்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு ஈரான் பங்கேற்கும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில், பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு அமெரிக்காவின் துணை அதிபர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் தரப்பும் பங்கேற்க வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்திருக்கும் நிலையில், விரைவில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முழு தீர்வை அமெரிக்கா – ஈரான் ஆகிய இரு நாடுகளும் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
