சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பயிலும் 11ம் வகுப்பு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான இலவச சைக்கிள் திட்டத்திற்கான டெண்டரில் குறைந்த விலையை ‘ஹீரோ’ நிறுவனம் வழங்கி உள்ளது. மொத்தம் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 லட்சம் ‘மாடர்ன்’ சைக்கிள்களை இந்த நிறுவனம் தயாரித்து வழங்கும் வகையிலான இந்த டெண்டரில் மாணவர்களுக்கான ஒரு சைக்கிளின் மதிப்பு ரூ.7,235 என்றும், மாணவிகளுக்கான ஒரு சைக்கிள் மதிப்பு ரூ.7,476 எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டான 2026-27ல் 11ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பிறகு முதல் முதலாக இந்த சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.
இந்த முறை மாணவ-மாணவிகளுக்கு ‘மாடர்ன்’ சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. அதன்படி சைக்கிள் மட்டுமின்றி ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட உள்ளது. இந்த சைக்கிள்கள் உற்பத்தி செய்வதற்காக தமிழக அரசு சார்பில் டெண்டர் கோரப்பட்டது.
இதில் குறைந்த விலையை ‘ஹீரோ’ சைக்கிள் நிறுவனம் கோரியுள்ளது. வரி அனைத்தையும் சேர்த்து பள்ளி மாணவர்களுக்கான ஒரு சைக்கிள் ரூ.7,235க்கும், மாணவிகளுக்கான ஒரு சைக்கிளை ரூ.7,476க்கும் டெண்டர் கோரியது. இதற்கு அடுத்ததாக எஸ்கே பைக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் மாணவர்களின் சைக்கிளுக்கு ரூ.7,422ம், மாணவிகளுக்கான சைக்கிள் விலையாக ரூ.7,716.20ம் நிர்ணயம் செய்தது. ‘அவான்’ சைக்கிள்ஸ் லிமிடெட் நிறுவனம் மாணவர்களுக்கான சைக்கிள் விலை ரூ.7,449.39க்கும், மாணவிகளுக்கான சைக்கிள் விலையை ரூ.7,610.04க்கும் கோரியது.
இதில் ‘ஹீரோ’ நிறுவனம் தான் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள்களுக்கு குறைந்த விலையை கோரியுள்ளது. இதனால் இதனால் இந்த டெண்டர் ‘ஹீரோ’ நிறுவனம் வசம் செல்ல உள்ளது. ‘ஹீரோ’ நிறுவனத்தின்படி பள்ளி மாணவர்களுக்கான ஒரு சைக்கிள் ரூ.7,235க்கும், மாணவிகளுக்கான ஒரு சைக்கிளை ரூ.7,476க்கும் தயாரிக்கப்பட உள்ளது.
இந்த விலையில்லா சைக்கிள் திட்டத்தின்படி 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 சைக்கிள்களை தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. இதில் மாணவர்களுக்கான சைக்கிள் 2 லட்சத்து 37 ஆயிரத்து 133 ஆகவும், மாணவிகளுக்கான சைக்கிள் 2 லட்சத்து 95 ஆயிரத்து 255 ஆகவும் இருக்கும். இதனால் இந்த திட்டத்திற்கு மொத்த செலவு ரூ.392 கோடியாக இருக்கும். பட்ஜெட்டில் விலையில்லா சைக்கிள் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்ததை விட இது அதிகமாகும்.
