அரிசி வாங்கவே மக்கள் தவிக்கும்போது விமான எரிபொருளுக்கு வரிச்சலுகையா? தவெக அரசைச் சாடி சீமான் அறிக்கை! – seeman slams tvk government over aviation fuel tax cuts amid rise in essential commodity prices

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், விமான எரிபொருளுக்கான வரியைக் குறைக்க முன்னுரிமை அளித்துள்ள தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தவெக அரசின் இந்த நிர்வாகக் குளறுபடிகளை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.

சீமான் எக்ஸ் பதிவு

அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? இந்த ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்கானதா? அல்லது தனியார் முதலாளிகளுக்கானதா?

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வானூர்தி எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. பருப்பு முதல் எண்ணெய் பொருட்கள் வரை அனைத்தின விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை வானூர்தி நிலையத்தில் வானூர்தி எரிபொருள் மீதான வரியை 29 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகவும், பிற வானூர்தி நிலையங்களில் குறிப்பிட்ட வானூர்தி சேவைகளுக்கான வரியை 29 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாகவும் குறைத்திருக்கிறது.

வானூர்தி நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய் அவர்கள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக தவெக அறிவித்தது. ஆனால், குறைந்த விலை என்றுகூறி சிறிதும் தரமற்ற அரிசியை தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாங்கும் விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதில் அலட்சியமாய் இருப்பது ஏன்?

முதலமைச்சரின் கோட் சூட் உடை மாற்றத்தை தவிர தவெக அரசால் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றம்தான் என்ன? அரிசி வாங்குவதற்கே மக்கள் அல்லல்படும் அவலநிலைக்கு ஆளானதா? அல்லது தவெக நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை செய்வதும், போதைப்பொருள் விற்பதும்தான் மாற்றமா?

அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, வானூர்தி பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது? இந்த ஆட்சி யாருக்கானது? அன்றாடம் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? பல்லாயிரம் கோடி முதலீட்டில் வானூர்தி நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா?

வானூர்தி போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறும் அரசு, மக்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்கும் அதே அக்கறையைக் காட்ட வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை வானூர்திகள் பறக்கிறது என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது? என்பதில்தான் உள்ளது. மக்களின் வயிற்றுப்பசியைவிட வானூர்தி நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை.

ஆகவே, தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் அக்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்டுங்கள்! என பதிவு.

Source link