திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா இன்று (25-10-26) நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் பேசியதாவது, “நாம் ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. என்னவென்றால், பட்டா பிரச்சனை இன்னும் தீராமல் இருக்கிறது, அதனை சரி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதில் இருக்கிற சட்ட சிக்கல்களை தீர்க்க அமைச்சர்களை கூட்டி தீர்மானம் போட்டு அதை சரி செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்போது கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விடாப்பிடியாக தொடர்ந்து அந்த பணியை வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.
தமிழ்நாட்டில் இதுவரையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நம்முடைய ஆட்சிக் காலத்தில் 23 லட்சத்து 6 ஆயிரத்து மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நம்முடைய மாநிலத்தில் அதை நடத்தி காட்டிய பெருமை கே.கே.எஸ்.எஸ்.ஆரையே சாரும். இன்றைய நிலையில், வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் ஆட்சி அமைந்திருக்கிறது. இந்த ரீல்ஸ் ஆட்சியில் வாக்களித்த மக்கள் கூட புலம்புகின்ற சூழல் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது, நிர்வாக சீர்கேடு நிலைகுலைந்து போயிருக்கிறது, பாலியல் குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. எந்த தொலைக்காட்சியை பார்த்தாலும் சரி சோசியல் மீடியாவை பார்த்தாலும் சரி, கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை என்ற செய்திகள் வருகிறது.
சிங்கப்பெண் என்ற ஒரு படையை உருவாக்கினார்கள். அந்த சிங்கப்பெண்களை காப்பாற்றுவதற்கு இன்னொரு படை உருவாக்கும் நிலை தான் இன்றைய ஆட்சி இருக்கிறது. இரண்டு கட்சிக்கும் இடையில் தான் போட்டி என்று சொன்னார். நான் அதற்கு, மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் தான் போட்டி என்று சொன்னேன். அது இன்று மாறி பாலியல் வன்கொடுமையா? போதைப்பொருள் நடமாட்டமா? என்பதற்கு தான் போட்டி இருக்கிறது. மேடைக்கு மேடை தீயசக்தி என்று அவர் புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த தீய சக்தி யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்து கொண்டிருக்கிறது. 6 மாதம் கூட நிலைக்க முடியாத நிலையில் தான் இந்த ஆட்சி போய்க் கொண்டிருக்கிறது. விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு தயாராகுங்கள்” என்று பேசினார்.
