எழுதியவர்: ஷியாம்லால் யாதவ்
ஒவ்வொரு ஆண்டும் மத்திய குடிமைப் பணி ஆணையத்தால் (யு.பி.எஸ்.சி) நடத்தப்படும் குடிமைப் பணிகள் தேர்வு (சி.எஸ்.இ) மூலம் தேர்வாகும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான தொடக்கப் பயிற்சி, வழக்கமாக ஆகஸ்ட் கடைசி அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் (எல்.பி.எஸ்.என்.ஏ.ஏ) தொடங்கி டிசம்பரில் முடிவடையும்.
2025-ஆம் ஆண்டு குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற 958 தேர்வர்களுக்கு இந்த ஆண்டுக்கான பயிற்சி ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தொடங்கும் என எல்.பி.எஸ்.என்.ஏ.ஏ காலண்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தப் பயிற்சிப் படிப்பு இதுவரை தொடங்கவில்லை.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தத் தொடக்கப் பயிற்சி முடக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதால், அடுத்த தலைமுறை அதிகாரிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓ.பி.சி) “கிரீமிலேயர்” (பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினர்) தகுதியைத் தீர்மானிப்பதில் “சமநிலை” (equivalence) குறித்து உச்ச நீதிமன்றம் 2026 மார்ச் 11-ம் தேதி ஒரு தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பை அமல்படுத்துவதற்கான 6 மாத கால அவகாசம் முடிவடைய 3 வாரங்களே இருந்த நிலையில், ஆகஸ்ட் 24-ம் தேதி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி சில விளக்கங்களைக் கோரியது.
செப்டம்பர் 24-ம் தேதி, மத்திய அரசின் இந்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதன் விளைவாக, புதிய தேர்வர்களுக்கான பணி ஒதுக்கீடு மற்றும் தொடக்கப் பயிற்சி ஆகியவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
நிச்சயமற்ற நிலை
வெற்றி பெற்ற தேர்வர்களில் ஒருவரான, இந்திய ஆட்சிப் பணிக்கு (ஐ.ஏ.எஸ்) தேர்வாகக்கூடிய ரேங்க் பெற்ற நபர் கூறுகையில், “தொடக்கப் பயிற்சி குறித்த அழைப்பிற்காக நான் தொடர்ந்து காத்திருக்கிறேன். இதுவரை பணி ஒதுக்கீடு செய்யப்படாததால், அதிகாரிகளை அணுகவும் நாங்கள் தயங்குகிறோம்” என்றார்.
இந்திய வருவாய் பணிக்கு (ஐ.ஆர்.எஸ்) தேர்வாகக்கூடிய ரேங்க் பெற்றுள்ள மற்றொரு தேர்வர், “நான் தினமும் எல்.பி.எஸ்.என்.ஏ.ஏ (LBSNAA) இணைதளத்தைப் புதுப்பித்துப் பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்கிறேன். காலண்டரில் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்த பயிற்சிப் படிப்பு, தற்போது வரை தொடங்கப்படாமல் உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், 2025-ம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றும், தங்களது தரவரிசையை உயர்த்திக் கொள்ள இந்த ஆண்டும் முதன்மைத் தேர்வை (Mains) எழுதிய தேர்வர்களுக்கு, டெல்லியில் உள்ள தேசிய தொலைத்தொடர்பு நிதி அகாடமியில் பயிற்சி தொடங்கப்படவிருந்தது. முசோரி பயிற்சி தொடங்கி ஒரு வாரத்தில் தொடங்க வேண்டிய அப்பயிற்சியும் தற்போது காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குடிமைப் பணியில் ஒருவரின் பணி மூப்பு என்பது தொடக்கப் பயிற்சி தொடங்கும் நாளிலிருந்தே கணக்கிடப்படுகிறது. இந்தத் தொடர் தாமதம் புதிய தேர்வர்களைப் பாதித்துள்ளதோடு, அவர்களின் பணியில் சேரும் காலத்தையும் நீண்டகால தொழில்முறை வளர்ச்சியையும் நிலைகுலைய வைத்துள்ளது.
இதுகுறித்து எல்.பி.எஸ்.என்.ஏ.ஏ மூத்த அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில், “நாங்கள் தொடக்கப் பயிற்சிக்காகத் தயாராகி வருகிறோம், ஆனால் அதன் தொடக்க தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உயர் மட்டத்தில் முடிவு எடுக்கப்பட வேண்டும், நாங்கள் மேலதிக உத்தரவுகளுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.
100 ஓ.பி.சி தேர்வர்களின் எதிர்காலம்
தற்போதைய இந்தச் சிக்கல், 2016 முதல் யு.பி.எஸ்.சி தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றும் “கிரீமிலேயர்” பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி ஓ.பி.சி இடஒதுக்கீடு தகுதி நிராகரிக்கப்பட்ட சுமார் 100 தேர்வர்களின் எதிர்காலத்தையும் உள்ளடக்கியுள்ளது.
இடஒதுக்கீட்டின் நன்மைகள் ஓ.பி.சி பிரிவில் உள்ள உண்மையான பின்தங்கிய நிலையை அடைவதை உறுதி செய்யவே ‘கிரீமிலேயர்’ கொள்கை கொண்டு வரப்பட்டது. ஆனால், பல்வேறு அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் இதற்கான தகுதியையும் வருமானத்தையும் எவ்வாறு அளவிடுவது என்பதில் நீண்டகாலமாகக் குழப்பம் நீடிக்கிறது. அரசுப் பணியில் இல்லாதவர்களுக்கான வருமான வரம்பு 1993-இல் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் 2004, 2008 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் மாற்றியமைக்கப்பட்டது. 2017-ல் இந்த வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது, அதுவே இதுவரை மாற்றமின்றித் தொடர்கிறது.
அரசியலமைப்பு பதவிகளை வகிப்பவர்கள்; அகில இந்திய சேவைகள், மத்திய மற்றும் மாநில அர்சுப் பணிகளின் குரூப் ஏ / கிளாஸ் I அதிகாரிகள்; மத்திய மற்றும் மாநிலங்களின் குரூப் பி / கிளாஸ் II அதிகாரிகள்; பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள்; ஆயுதப்படைகளின் அதிகாரிகள்; தொழில்முறை வல்லுநர்கள், வர்த்தகம் மற்றும் தொழிலில் ஈடுபடுபவர்கள்; சொத்து உரிமையாளர்கள்; மற்றும் வருமானம்/சொத்து மதிப்பீட்டின் கீழ் வருபவர்கள் ஆகியோர் இந்த கிரீமிலேயர் வரம்பிற்குள் வருகின்றனர்.
சில மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பதவிகளுக்கான சமநிலை 2017-ல் முடிவு செய்யப்பட்ட போதிலும், தனியார் துறை, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு மாநில அரசு அமைப்புகளுக்கான இந்தச் சமநிலை கேள்வி நிலுவையிலேயே இருந்தது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த விவகாரத்திற்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் 11 தீர்ப்பில் தீர்வு கண்டது. ஓ.பி.சி பிரிவினரிடையே கிரீமிலேயரைத் தீர்மானிப்பதற்கு வருமானம் மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த அமர்வு, “கிரீமிலேயரை விலக்குவதன் நோக்கம்… ஒரே சமூக வகுப்பைச் சேர்ந்த சமமான உறுப்பினர்களுக்கு இடையே செயற்கையான வேறுபாடுகளை உருவாக்குவது அல்ல… ஒரே மாதிரியான நிலையில் உள்ள ஓ.பி.சி தேர்வர்களைச் சமமற்ற முறையில் நடத்துவது சட்டப்பூர்வமாகத் தவறானது மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின்படி அனுமதிக்க முடியாதது” என்று சுட்டிக்காட்டியது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT), 1993-ஆம் ஆண்டின் அலுவலகக் குறிப்பாணைக்கு (OM) விளக்கமளித்து அக்டோபர் 14, 2004-ல் வெளியிட்ட விளக்கக் குறிப்பின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 1993 குறிப்பாணை சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை வருமான வரம்பிலிருந்து விலக்கியிருந்த வேளையில், 2004 விளக்கக் குறிப்பு பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பள வருமானத்தையும் சேர்க்க வேண்டும் எனக் கூறியதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் குழந்தைகளுக்கு, அவர்களின் பதவிகளைக் கணக்கில் கொள்ளாமல் (குரூப் ஏ, பி, சி அல்லது டி எனப் பார்க்காமல்), சம்பள வருமானத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து இடஒதுக்கீட்டை மறுப்பது அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 16-வது சரத்துகளின்படி தன்னிச்சையான பாகுபாடாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT)-யின் 2004 விளக்கக் குறிப்பின் பத்தி 9, அரசுப் பதவிகளுடன் ஒப்பிடப்படாத இடங்களில், பெற்றோரின் சம்பளம் மற்றும் இதர மூலங்களிலிருந்து வரும் வருமானம் தனித்தனியாக மதிப்பிடப்பட்டு கிரீமிலேயர் தீர்மானிக்கப்படும் எனக் கூறியது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ ஆட்சிக் காலத்தில் முடக்கப்பட்ட இந்த நடைமுறை, 2014-ல் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியைப் பிடித்த பிறகு, 2016 முதல் (சி.எஸ்.இ 2015 பேட்ச்) தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
அரசின் நிலைப்பாடு
உச்ச நீதிமன்றத்தை அணுகிய மத்திய அரசு, 2025 குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியாகி 5 நாட்களுக்குப் பிறகே மார்ச் 11 தீர்ப்பு வந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்தத் தீர்ப்பை முன்சென்ற காலத்திற்குப் பொருந்தும் வகையில் அமல்படுத்தக் கூடாது என்றும், ஏற்கனவே முடிவடைந்த சேர்க்கைகள், கல்வி ஆண்டுகள், வழங்கப்பட்ட பட்டங்கள் அல்லது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட உரிமைகளைப் பாதிக்கக் கூடாது என்றும் விளக்கங்களைக் கோரியுள்ளது.
மேலும், பதவிகளுக்கான சமநிலையை மதிப்பீடு செய்யும் பணியை மேற்கொள்ள அரசுக்கு 2 ஆண்டுகள் கால அவகாசம் தேவை என்றும் கோரியுள்ளது. தரவரிசைப் பட்டியல் மற்றும் பணி ஒதுக்கீட்டை இறுதி செய்வதில் ஏற்படும் தாமதம், புதிய அதிகாரிகளின் பயிற்சி அட்டவணை, மூப்பு நிலை மற்றும் ஊதிய நிர்ணயம் ஆகியவற்றில் சங்கிலித் தொடர் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசு வாதிட்டுள்ளது.
தற்போதைய சேர்க்கை அளவின்படி, அகில இந்திய சேவைகள் மற்றும் மத்திய சிவில் சேவைகளுக்குத் தேர்வாகும் அதிகாரிகள் எல்.பி.எஸ்.என்.ஏ.ஏ மற்றும் அதன் பங்களிப்பு நிறுவனங்களில் ஆண்டுதோறும் இந்தத் தொடக்கப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.
புதிதாகத் தேர்வாகும் அதிகாரிகளுக்கு அரசியலமைப்பு, அரசின் செயல்பாடுகள் மற்றும் பொதுக் கொள்கை குறித்த பொதுவான புரிதலை உருவாக்கவும், நாட்டின் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த அதிகாரிகளுக்கிடையே நட்புறவை வளர்க்கவும் இந்தத் தொடக்கப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் தாமதம் பயிற்சி அட்டவணையை மட்டுமன்றி, ஒரு பொதுவான நிர்வாகப் பண்பாட்டின் உருவாக்கத்தையும் பாதிக்கும்.
முன்பு எல்.பி.எஸ்.என்.ஏ.ஏ-வில் பயிற்சி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்: “சுதந்திர இந்தியாவின் குடிமைப் பணிகள் வரலாற்றிலேயே இப்படி ஒரு குழப்பமான சூழல் ஏற்பட்டது இதுவே முதல் முறை” என்றார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு (என்.சி.பி.சி) அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கியது முதல், இடஒதுக்கீடு முறையில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்ய ஓ.பி.சி உள்-ஒதுக்கீட்டு ஆணையத்தை அமைத்தது வரை, மோடி அரசு ஓ.பி.சி சமூகத்தினரைச் சென்றடைய முயற்சி செய்துள்ளது. இருப்பினும், புதிய குடிமைப் பணிகள் தேர்வர்கள், குறிப்பாக ஓ.பி.சி தேர்வர்கள் மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கிரீமிலேயர் சர்ச்சை காரணமாக அரசுக்குச் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
