சென்னை: “தவெகவுக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களே தவெக ஆட்சியை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள்.” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து, பேசிய அவர், தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு ஒருபுறம், நிர்வாக சீர்கேடு மறுபுறம், இவை தவிர பாலியல் குற்றங்கள், கொலை – கொள்ளை என்ற செய்திகள் இல்லாத நாட்களே இல்லை. கடந்த சில நாட்களாக குழந்தைகள் மாயமாகி வருகின்றனர். மின் வெட்டு, அரிவாள் வெட்டு, விலைவாசி உயர்வு என நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ளன. தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் பாதித்துள்ள ரீல்ஸ் ஆட்சியாக இன்றைய ஆட்சி இருக்கிறது.
தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமையா? இல்லை போதைப்பொருள் நடமாட்டமா? என்பதாகத்தான் இன்றைய தவெக ஆட்சி நடந்து வருகிறது. உண்மையான தீயசக்தி யார் என்பதை மக்கள் உணர்ந்து வருகிறார்கள்.
தவெகவுக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்ல, வாக்களித்தவர்களே தவெக ஆட்சியை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். தவெக ஆட்சியில் உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படையை பாதுகாப்பதற்கு இன்னொரு படையை உருவாக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தயாராகுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
