டி-20 உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் திடீர் 'பல்டி': இந்தியாவுடன் விளையாட சம்மதம்

புதுடில்லி: ஐ.சி.சி., அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.

வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், இந்திய கிரிக்கெட் போர்டு அறிவுறுத்தலால், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கு பதிலடியாக, பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால், ‘டி-20’ உலக கோப்பை தொடரில் பங்கேற்க, வங்கதேச அணி இந்தியா வர மறுத்தது.

இதனால் வங்கதேச அணி, நீக்கப்பட்டு, ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க மாட்டோம்,’ என பாகிஸ்தான் அரசு அறிவித்தது.

இதனால், ஸ்பான்சர், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஒட்டுமொத்தமாக ரூ. 2,288 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டது. இதையடுத்து, லாகூர் சென்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துணைத் தலைவர் இம்ரான் கவாஜா, பாகிஸ்தான், வங்கதேச கிரிக்கெட் நிர்வாகிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, ‘இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் நடத்த வேண்டும், ஐ.சி.சி., வருமான பகிர்வில் பாகிஸ்தானுக்கு அதிக பங்கு தர வேண்டும்,’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பி.சி.பி., வைத்தது.

வங்கதேசம் சார்பில்,’ கிரிக்கெட் நலனை முன்னிட்டு, இந்தியாவுடன் விளையாட வேண்டும்,’ என பாகிஸ்தானிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. முடிவில், தனது புறக்கணிப்பு முடிவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக, பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதனால் வரும் பிப்., 15ல் இலங்கையின் கொழும்புவில் இந்தியா, பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி நடக்க உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் மோதலுக்கு உதவியதால், உலக கோப்பை தொடரில் இருந்து விலகிய, வங்கதேசத்தின் மீது, எவ்வித தடையும் விதிக்கப் போவதில்லை,’ என ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.

Source link