தேர்தலுக்கு பின் ஸ்டாலின் கட்சி, கனிமொழி கட்சி என திமுக பிரியும்; அண்ணாமலை

கோவை: தமிழகத்தில் இனி ஜென்மத்துக்கும் திமுக ஆட்சிக்கு வராது. தோற்றால், கனிமொழி தனி கட்சி; ஸ்டாலின் ஒரு கட்சி என திமுக பிரியும் என, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை வடக்கு தொகுதியில் பிரசாரம் செய்த அவர் அளித்த பேட்டி:

திமுகவினர் ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தேன். உதாரணமாக, அமைச்சர் காந்தியின் வேட்டி, சேலை ஊழல்; அவரின் 160 கோடி ரூபாய் ஊழல் குறித்து ஆதாரத்துடன் அளித்துள்ளேன்.

பாஜ அலுவலகம் வந்து, லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., என்னிடம் விசாரணை நடத்தினார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சி மாறட்டும். புழல் சிறையில் அவர்களுக்கு தனி ‘பிளாக்’ கட்டி நடவடிக்கை எடுக்கப்படும்.

விஜயின், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் ‘லீக்’ ஆனதை, வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விவகாரத்தில், மத்திய அமைச்சர் முருகனை தொடர்புபடுத்தி பேசுவது வன்மத்தனத்தின் உச்சகட்டம். எந்த விஷக்கிருமிகள் அதை செய்திருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் இனி, திமுக ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது. திமுக தோற்றால், கனிமொழி தனி கட்சி; ஸ்டாலின் ஒரு கட்சி என பிரியும். யாரிடம் திமுக செல்லும் என்று யாருக்குமே தெரியாது.

செந்தில் பாலாஜியும் வாய்ப்பை பார்ப்பார். கனிமொழியிடம் சேர்வதா அல்லது ஸ்டாலினிடம் செல்வதா என்று யோசிப்பார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Source link