தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் சென்னை கோட்டை பகுதியில் எஸ் பேண்ட் (S Band) வானிலை ரேடாரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையத்தில் இருந்துதான் தமிழ்நாடு முழுவதும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் வானிலை நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நிலவரம், வானிலை நிலவரம், புயல்களின் நகர்வுகள் போன்றவற்றை கண்காணிக்க பல்வேறு இடங்களில் அதிநவீன ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் சென்னையில் மட்டும் இரண்டு ரேடார்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளிக்கரணையில் உள்ள எக்ஸ் பேண்ட் (X Band) ரேடார் 200 கி.மீ சுற்றளவு வரையிலும், சென்னை கோட்டை பகுதியில் உள்ள எஸ் பேண்ட் ரேடார் 400 கி.மீ சுற்றளவு வரையிலும் உள்ள வானிலை நிகழ்வுகளை துல்லியமாக வழங்கி வருகின்றன.
இந்தநிலையில், சென்னை கோட்டையில் சென்னை கோட்டை பகுதியில் எஸ் பேண்ட் ரேடாரில் தற்போது சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் பள்ளிக்கரணை ரேடார் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினாலும், தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பள்ளிக்கரணை ரேடார் மூலம் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
