திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இல்லத் திருமண விழா இன்று (25-10-26) நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி கனிமொழி, கே.என்.நேரு, திண்டுக்கல் லியோனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் லியோனி, “ராமருடைய செருப்பு எப்படி அயோத்தியை ஆண்டதோ, அது போல் நீங்கள் (மு.க.ஸ்டாலின்) அவிழ்த்து வைத்த செருப்பு தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. உங்களுடைய திட்டங்கள் தான் இன்னும் மக்கள் பயன்பெற்று கொண்டிருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், அறிவுலக திறப்பு, மெட்ரோ ரயில் பயணம் என ஏராளமான திட்டங்களால் மக்கள் உங்களைத் தான் நினைத்துக் கொண்டே அந்த திட்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் உங்களுடைய செருப்பு தான் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஆட்சி செய்பவர் பரதன் என்று நினைத்துவிடாதீர்கள். 14 ஆண்டுகள் செருப்பு ஆண்டது போல், இது 14 ஆண்டுகள் நீடிக்காது. 14 வாரமோ, 14 மாதமோ இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி மீண்டும் உதயசூரியனை மு.க.ஸ்டாலின் உதிக்க வைப்பார்” எனக் கூறினார்.
