தாமு பற்றி பட்: உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஷெஃப் தாமு இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 72 ஆகும். தாமு இறந்த செய்தி கிடைத்த உடன் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தாமுவுடன் சேர்ந்து பணியாற்றிய ஷெஃப் வெங்கடேஷ் பட் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் வெங்கடேஷ் பட் கூறியிருப்பதாவது, டாக்டர், பத்மஸ்ரீ ஷெஃப் தாமு அவர்கள் இயற்கை எய்தினார் என்கிற செய்தியை கேட்டு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. கேட்டரிங் துறையில் புகழ் பெறலாம், பத்மஸ்ரீ விருது கூட பெறலாம் என முன்னுதாரணமாக இருந்தவர். 30 புத்தகங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் பாரம்பரிய சமையல் வகைகளை உலகிற்கு பிரபலமாக்கியவர்.
என் நண்பர்: எங்களுக்கு இடையே 15 ஆண்டு கால நட்பு. நாங்கள் இருவரும் 15 ஆண்டுகள் சேர்ந்து வேலை செய்தோம். அந்த நினைவுகள் என் மனதில் எப்பொழுதும் பசுமையாக இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், கோடானு கோடி ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப அதிர்ச்சி அளிக்கும் செய்தி. அவரை எப்படி பெருமைப்படுத்த முடியுமோ அப்படி பெருமைப்படுத்த வேண்டும். அவரின் நினைவு என்றுமே நம்முடன் இருக்கும். அவருடன் இருந்த காலம் எப்பொழுதும் ரொம்ப பசுமையான நினைவுகளாக இருக்கும். அவரின் ஆத்மா சாந்தி அடைய நான் பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.
வெங்கடேஷ் பட்டின் போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ, தாமு அப்பா இறப்பால் கவலையாக உள்ளது. உங்களை மிஸ் பண்ணுவோம் அப்பா. வெங்கடேஷ் பட், தாமு காம்போ தான் அல்டிமேட். இனி அந்த காம்போவை சேர்த்து பார்க்க முடியாதே என்று புலம்பியிருக்கிறார்கள்.
மாதம்பட்டி ரங்கராஜ் இரங்கல்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷெஃப் தாமு உடன் சேர்ந்து நடுவர்களில் ஒருவராக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் இன்ஸ்டா ஸ்டோரியில் இரங்கல் தெரிவித்துள்ளார். தான் ஷெஃப் தாமுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நீங்கள் எனக்கு தகப்பன் மாதிரி. என் இதயத்தில் உங்களுக்கு எப்பொழுதுமே ஸ்பெஷல் இடம் உண்டு என தெரிவித்துள்ளார். அதே ஸ்டோரியை தன் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் மாதம்பட்டியின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ்.
மணிமேகலை கவலை: குக் வித் கோமாளி ஷோவில் பணியாற்றியபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேலை ஷெஃப் தாமு பற்றி தெரிவித்திருப்பதாவது, தாமு அப்பா. வார்த்தையே வாரவில்லை. நீங்கள் எனக்கு அப்பா போன்றவர். உங்களின் இழப்பை நம்ப முடியவில்லை. ரொம்ப வலிக்குது தாமுப்பா. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் அப்பா என தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மிஸ் யூ அப்பா: உங்களை மிஸ் பண்ணுவதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது அப்பா. பெயருக்கு உங்களை அப்பா என கூப்பிடவில்லை. மனதார கூப்பிட்டோம் என குக் வித் கோமாளி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
