இந்த அக்டோபர் மாதம் அல்லது வருகிற நவம்பர் மாதத்தில் புதிதாக கார் வாங்க நினைப்பவர்கள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் இதோ..!
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நிறையப் பேர் தங்களுடைய வீட்டுக்கு சொந் தமாக ஒரு கார் வாங்கலாம் என்று நினைப்பார்கள். ஒருவேளை நீங்களும் கார் வாங்குவதாக இருந்தால் சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அக்டோபர் மாத நிலவரப்படி, சில குறிப்பிட்ட வங்கிகளில் கார் கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.70 சதவீதத்தில் தொடங்குகிறது. கார் வாங்கும் முடிவை எடுக்கும்போது, வெறும் மாடலைத் தேர்ந்தெடுத்து முன்பணம் செலுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல், வட்டி விகிதம் மற்றும் மாதத் தவணை (EMI) ஆகியவற்றை கவனமாகப் பார்க்க வேண்டும். வங்கியின் விதிமுறைகளின்படி கடன் வாங்குபவரின் வட்டி விகிதம் மாறுபடலாம் என்பதால், விண்ணப்பிக்கும் முன் ஒட்டுமொத்த கடன் செலவையும் ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகும்.
குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள்!
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் கனரா வங்கி ஆகியவை ஆண்டுக்கு 7.70 சதவீத தொடக்க வட்டி விகிதத்துடன் மிகக் குறைந்த வட்டியை வழங்குகின்றன. ஐடிபிஐ வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் 7.75 சதவீத தொடக்க வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இருப்பினும், விளம்பரப்படுத்தப்படும் குறைந்தபட்ச வட்டி விகிதம் அனைவருக்கும் பொருந்தாது என்பதால், தங்களுக்கு வழங்கப்படும் வட்டி மற்றும் செயலாக்கக் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ரூ. 5 லட்சம் கார் கடனுக்கான EMI!
5 ஆண்டுகள் கால அவகாசத்துடன் எடுக்கப்படும் ரூ. 5 லட்சம் கார் கடனுக்கான மாதத் தவணையானது, வங்கிகளைப் பொறுத்து ரூ. 10,067 முதல் ரூ. 11,262 வரை மாறுபடுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்தத் தொகை சிறியதாகத் தோன்றினாலும், முழு கடன் காலத்திற்குக் கணக்கிடும்போது அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உண்மையான EMI தொகையானது அந்தந்த வங்கியின் வட்டி விகிதம் மற்றும் கடன் விதிமுறைகளைப் பொறுத்து அமையும்.
கடன் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியது!
கார் கடனுக்கான கடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன், மாதத் தவணை உங்கள் மாதாந்திர பட்ஜெட்டுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் பொருந்துமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கார் வாங்கிய பிறகு அதற்குத் தேவையான எரிபொருள், இன்சூரன்ஸ் மற்றும் பராமரிப்புச் செலவுகள் போன்ற பிற செலவுகளையும் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
கார் கடன் செயலாக்கக் கட்டணம்!
கடன் வழங்குபவர்களிடம் கடனுக்காக வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணம் செயலாக்கக் கட்டணமாகும். இது வங்கியைப் பொறுத்து ஒரு நிலையான தொகையாகவோ அல்லது கடன் தொகையில் ஒரு சதவீதமாகவோ இருக்கலாம். உதாரணமாக, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் செயலாக்கக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 2026 டிசம்பர் 31 வரை செயலாக்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. பிற வங்கிகள் நிலையான கட்டணங்கள் அல்லது சதவீதத்தின் அடிப்படையில் வேறுபட்ட கட்டணங்களை வசூலிக்கின்றனர்.
செயலாக்கக் கட்டணம் அதிகமாக இருந்தால், குறைந்த வட்டி விகிதம் என்பது ஒட்டுமொத்தச் செலவைக் குறைப்பதாக இருக்காது. எனவே, கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு, வங்கியிடமிருந்து கட்டணங்களின் முழு விவரங்களையும் பெற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
