மும்பை: விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்ததற்கு நாங்கள் காரணம் அல்ல என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அரசியலில் குதித்துள்ள நடிகர் விஜய் நடித்துள்ள படம் ஜனநாயகன். தமது திரைவாழ்வின் கடைசி படம் என்று அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டு கட்சி தொடங்கி, தற்போது தேர்தல் பிரசாரத்திலும் இறங்கி உள்ளார். பல சிக்கல்களை எதிர்கொண்ட அந்த படம் என்று வெளி வரும் என்று தெரியாத சூழலே தற்போது வரை நிலவுகிறது.
படம் ரிலீஸ் ஆகாததற்கு அரசியலே காரணம் என்று விஜயும், அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூறி வருகின்றனர். இப்படியான சூழலில், ஜனநாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் சில நாட்கள் முன்பு சட்ட விரோதமாக இணையத்தில் வெளியானது. திட்டமிடப்படி படம் ரிலீஸ் ஆகாத சூழலில், இணையத்தில் படக்காட்சிகள் வெளியானதால் படத்தயாரிப்பு குழு கடும் அதிர்ச்சி அடைந்தது. இந்த அதிர்ச்சியின் உச்சக்கட்டமாக தற்போது மொத்த படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், ஜனநாயகன் படம் லீக் ஆனதற்கு நாங்கள் தான் காரணம் என்ற புகார் தவறானது; அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் தணிக்கை வாரியம் வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது. இந்த நடைமுறை கடவுச்சொல் மூலமே பாதுகாக்கப்படுகிறது. இந்த KDM கடவுச்சொல் ஆனது, தயாரிப்பாளரிடம் மட்டுமே தான் இருக்கும்.
இந்த கடவுச்சொல்லை தவிர வேறு ஏதேனும் கடவுச்சொல்லை பயன்படுத்தி படத்தை பார்க்க முடியாது. ஜனநாயகன் படம் டிஜிட்டல் சினிமா தொகுப்பு, உரிய ஒப்புதலுடன் மார்ச் 17ம் தேதி மும்பையில் படத்தை சான்றிதழுக்காக விண்ணப்பித்தவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தினம் முதல், படத்தின் சினிமா தொகுப்பு அவர்களிடமே தான் இருக்கிறது.
இவ்வாறு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
