“யாரும் நம்ப வேண்டாம்..கண்ணை மூடுகிறவரை தவெக தான்…” – நாஞ்சில் சம்பத் பரபரப்பு!

பிரபல மேடைப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், தவெகவின் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த சூழலில், அவர் தவெக மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை நாஞ்சில் சம்பத் முழுமையாக மறுத்தார்.

இந்த சூழலில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்து தவெகவில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் பேசியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. அதாவது அவர், ‘தவெக இயக்கம் அல்ல ரசிகர் மன்றம்! இது கட்சி அல்ல.. இது கார்பரேட் கம்பெனி! ஆதவ் போன்றவர்களின் அதிகார தோரணை என்னை அச்சப்பட வைக்கிறது!. தமிழ்நாடு இவர்கள் கையில் சென்றால் என்னாகும் என்று எண்ணி பார்க்கிறேன். நெஞ்சம் பதறுகிறது! ஆகவே.. தமிழ் பற்றுக்காகவும்.. தமிழ்நாட்டின் நலனுக்காகவும்.. இந்த போலி கூட்டத்திலிருந்து விடை பெறுகிறேன்! நான் வெளியே வருவது விலகல் அல்ல.. விடுதலை’ என அவர் பேசியதாக செய்திகள் வெளியாகின. இது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியது.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த செய்திக்கு நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தைக் கூட்டி எந்த ஃபண்டும் தேவையில்லை, சாலைகள் தரமானதாக இருந்தால் மட்டும் போதும் என்று நான் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை வியந்தும் விதந்தும் பேசியிருக்கிறேன். அந்த  ஆதவ் அர்ஜுனாவை நான் குறைத்து பேசியதாக சிலக் குறைப் பிரசவங்கள் செய்தி வெளியிடுவதை யாரும் நம்ப வேண்டாம்.

தவெக என்கிற அமைப்பில் பரப்புரைச் செயலாளராக கடமையாற்றுகிற நான், கண்ணை மூடுகிறவரை, கல்லறைக்குப் போகிற வரை இந்தக் கடமையை செய்வதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என்னைக் களங்கப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறாது” எனப் பதிவிட்டுள்ளார்.