புதுடில்லி: சின்மயா அம்ரித் மகோத்சவ் சர்வதேச மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார். இதில் அவர் பேசியதாவது; உலகளவில் இரு மிகப்பெரிய போர்கள் நடந்து வருகின்றன. ஒன்று உக்ரைனில், மற்றொன்று மேற்காசியாவில் நிலவுகிறது.
இந்தப் போர்களினால் சர்வதேச அளவில் எரிபொருள், உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து சாமானிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா இதனை வேடிக்கை பார்க்காது. போரை நிறுத்தி, அமைதியை நிலைநாட்ட, இந்தியா முக்கிய பங்காற்றும். ஆயுதங்களினால் மட்டும் போரில் தீர்வு எட்டப்படாது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.
சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகள் மற்றும் முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்கும் அமைப்புகளில் வளர்ந்து வரும் நாடுகளை இனி புறக்கணிக்க முடியாது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். பயங்கரவாதத்தை அரசு நிர்வாகத்தின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தின் மீது அனைத்து நாடுகளும் சகிப்புத்தன்மையை காட்டக் கூடாது, இவ்வாறு கூறினார்.
