அதிகாரத்தை எதிர்க்கும் போராட்டங்கள்; அரசுகள் கையில் எடுக்கும் வெளிநாட்டுச் சதி: அன்று ஜெ.பி, அன்னா ஹசாரே, இன்று சி.ஜே.பி

எழுதியவர்:Vikas Pathak

ஆட்சியில் இருக்கும் அரசுகளும் ஆளும் கட்சிகளும் தங்களுக்கு எதிராக எழும் முக்கியப் போராட்ட இயக்கங்களைச் சிதைக்கவும், அவற்றுக்கான பிம்பத்தைக் கட்டமைக்கவும் “வெளிநாட்டுச் சதி” மற்றும் “நாட்டை நிலைகுலைக்கும் முயற்சி” ஆகிய இரு கருத்துருக்களைப் பலமுறை பயன்படுத்தி வந்துள்ளன; தற்போதைய நரேந்திர மோடி அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. அதேவேளையில், போராட்டக்காரர்கள் எப்போதும் தங்களின் போராட்டத்தை ஒரு அடிப்படை உரிமையாக நியாயப்படுத்த மகாத்மா காந்தியையோ அல்லது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையோ மேற்கோள் காட்டி வருகின்றனர்.

அரசியல் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு தொடர்பாகப் பல்வேறு காலகட்டங்களில் வெடித்த மூன்று முக்கியப் போராட்டங்களை, அன்றைய அரசுகளும் ஆளும் கட்சிகளும் எவ்வாறு சித்தரித்தன என்பதைப் பற்றிய பார்வையை இச்செய்தி வழங்குகிறது. தற்போதைய ‘காக்ரோச் ஜனதா கட்சி’ மற்றும் பரந்த எதிர்க்கட்சிகள் – முதலில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், பின்னர் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராகவும் நடத்தும் போராட்டங்கள், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை ஆட்டங்காண வைத்த 2011-ஆம் ஆண்டின் அன்னா ஹசாரே இயக்கம், மற்றும் அவசரநிலைக் காலத்தில் இந்திரா காந்தியை ஆட்சியில் இருந்து வீழ்த்திய ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கம் ஆகியவையே அந்த மூன்று போராட்டங்கள் ஆகும்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை இலக்கு வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உலகம் ஒரு புதிய உலக ஒழுங்கைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், சில மனிதர்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தக் கனவு காண்கிறார்கள்” என்றும், அவர்கள் “இந்தியாவின் உலகளாவிய நற்பெயரை அழிக்க விரும்புகிறார்கள்” என்றும் தெரிவித்தார். மேலும், “தோல்வியடைந்த தனது பொருளை மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக, காங்கிரஸ் கட்சி நாட்டின் நலன்களை இன்னும் எவ்வளவு காலத்திற்குப் பணயம் வைக்கும் என்று வியப்பாக இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் போபாலில் பேசுகையில், “நாட்டை நிலைகுலைத்து அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் ஆட்சி மாற்றக் கும்பலின் நயவஞ்சகத் திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” என்று கூறிய அதே நாளில் பிரதமர் மோடியும் இக்கருத்தைத் தெரிவித்தார்.

இதற்குச் சில நாட்களுக்கு முன்பு, நாக்பூரில் நடைபெற்ற ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் 101-வது நிறுவன தின விழாவில் பேசிய அதன் தலைவர் மோகன் பாகவத், “நாட்டிற்குள் இருக்கும் அமைப்புகள், கருத்தியல்கள் மற்றும் தனிநபர்கள் மீது வெறுப்பைத் தூண்ட முனையும்” போராட்டங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்தப் போராட்டங்களின் பின்னணியில் ஒரு உலகளாவிய சதித்திட்டம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டிய பாகவத், பிரான்ஸ் மற்றும் அல்பேனியாவில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களையும், வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் முன்னதாக நடந்த கலவரங்களையும் மேற்கோள் காட்டி, இதுபோன்ற போராட்டங்கள் நாட்டில் நிலையற்ற தன்மையையே ஏற்படுத்துகின்றன என்று வாதிட்டார்.

சமூக வலைதளத்தில் வெளியிட்ட பல பதிவுகளில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, போராட்டக்காரர்களை “மூளை கெட்ட நக்சல்கள்”, அராஜகவாதிகள் மற்றும் “தேசத்துரோகிகள்” என்று வர்ணித்தார். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் நிதின் நபீன் பேசுகையில், “நமது ஜனநாயகத்தில் மக்களால் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டதால் விரக்தியடைந்த எதிர்க்கட்சிகள், தற்போது வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலின் பேரில் பாரதத்தில் நிலையற்ற தன்மையையும் அராஜகத்தையும் பரப்பப் பெரும் சதித்திட்டத்தைத் தீட்டி வருகின்றன” என்று குற்றம் சாட்டினார்.

அன்னா ஹசாரே போராட்டம் (2011)

2011-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயும், பின்னர் நேரடி அரசியலில் நுழைந்த அரவிந்த் கெஜ்ரிவாலும் ஊழலை எதிர்ப்பதற்காக வலுவான லேக்பால் அமைப்பை உருவாக்கக் கோரி ஒரு போராட்டத்தைத் தொடங்கினர்.

அப்போதைய அரசு போராட்டங்களின் போது கட்டுப்பாடு காட்டியதுடன், லோக்பால் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வையும் கூட்டியது. இருப்பினும், தற்போதைய மோடி அரசு போராட்டங்களைச் சித்தரிப்பதைப் போலவே, அன்றைய அமைச்சர்களும் காங்கிரஸ் தலைவர்களும் அந்த இயக்கத்தைக் குழப்பமானது என்றும் வெளிநாட்டு நிதியுதவி பெற்றது என்றும் குற்றம் சாட்டி அறிக்கைகளை வெளியிட்டனர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக, அன்னா ஹசாரேவின் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தது.

2011 ஆகஸ்ட் 18 அன்று, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷீத் ஆல்வி, அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதை “மிரட்டல்” என்று முத்திரை குத்தினார். மேலும், எந்தவொரு அமைப்பும் இல்லாமல் தனியாக இருக்கும் ஒருவர் எவ்வாறு இந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்துகிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

கடந்த 65 ஆண்டுகளில் சுமார் 100 நாடுகள் சுதந்திரம் பெற்றுள்ள போதிலும், அவற்றில் எதுவும் இந்தியாவைப் போல வலிமையானதாக உருவெடுக்கவில்லை என்று ஆல்வி சுட்டிக்காட்டினார். உலகின் பிற நாடுகள் மத்தியில் இந்தியா தன் உண்மையான இடத்தைப் பிடிப்பதை விரும்பாத பல சக்திகள் இருப்பதாகப் பிரதமர் மன்மோகன் சிங் மக்களவையில் கூறியதை மேற்கோள் காட்டிய ஆல்வி, “அந்தச் சக்திகள் எவை? அன்னா ஹசாரேவின் இயக்கம் தொடர வேண்டும் என்று அமெரிக்கா கூற வேண்டிய அவசியம் என்ன வந்தது? இது பல சந்தேகங்களையும் ஐயங்களையும் எழுப்புகிறது” என்றார்.

இருப்பினும், இந்திய எதிர்ப்ப இயக்கத்தை அமெரிக்கா ஆதரிப்பதாக வந்த செய்திகளைத் தவறானவை என்று கூறி அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் மறுத்தார். அமெரிக்கா பிற நாடுகளின் விவகாரங்களில் தலையிடாது என்று கூறிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் மெக்கெயினும் ஆல்வியின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.

காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி 2011-இல் பேசுகையில், ஹசாரே “ஊழலில் மூழ்கியவர்” என்றும், அன்னா ஹசாரேவின் குழுவில் “சொகுசு பாசிஸ்டுகள், வெளிப்படையான மாவோயிஸ்டுகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்படும் மறைமுக அராஜகவாதிகள்” இடம் பெற்றுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார். ஆனால், பின்னர் அவர் ஹசாரேவுக்கு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கடிதம் அளித்தார்.

ஜெயபிரகாஷ் நாராயணன் இயக்கம் மற்றும் அவசரநிலை

அரசியல் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிராகத் தன்னை ஆட்சியில் இருந்து வீழ்த்தும் நோக்கில் செயல்பட்ட ஜெயபிரகாஷ் நாராயணனின் இயக்கத்தை எதிர்கொள்ளப் பிரதமர் இந்திரா காந்தி 1975-இல் அவசரநிலையை நடைமுறைப்படுத்தியபோது, அந்த இயக்கத்தை இந்தியாவை நிலைகுலைக்க நினைக்கும் “வெளிநாட்டுச் சதியின்” விளைவு என்று தாராளமாகச் சித்தரித்தார்.

2001-ஆம் ஆண்டில், அவசரநிலையின் 25-வது ஆண்டு நிறைவின் போது, வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா ஒரு கட்டுரையில் இது குறித்து விரிவாக எழுதியிருந்தார். அதில், “இந்திய அரசியல் உரையாடலுக்கு திருமதி காந்தியின் தனித்துவமான பங்களிப்பு ‘வெளிநாட்டுச் சதி’ என்ற கருத்தாகும். இந்தச் சதியின் சொந்த நாடு எது என்பதை உறுதிப்படுத்துவது கடினம் என்றாலும், அது வெள்ளை நிறமுடையது என்று ஒருவர் யூகிக்க முடியும். அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் எம். ஷமீமிற்குப் பிரதமர் அளித்துப் பேட்டியில், ‘எதிர்க்கட்சிகளின் நோக்கம் தெளிவானது. அரசாங்கத்தையும் நாட்டின் அனைத்து செயல்பாடுகளையும் முடக்கி, நாட்டின் ‘பிரேதத்தின்’ மீது ஏறி அதிகாரத்தைக் கைப்பற்றுவதே அது. மேலும் சில அடிகள் முன்னோக்கிச் சென்றிருந்தால், அது நாட்டின் சிதைவுக்கு வழிவகுத்து, வெளிநாட்டு ஆபத்துகளுக்கு நம்மைக் ஆளாக்கியிருக்கும்’ என்று குறிப்பிட்டார்” என குகா எழுதியுள்ளார்.

குகா மேலும் குறிப்பிடுகையில், “நவம்பர் 11 அன்று அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரையில் அவர் மீண்டும் இதே கருத்தைக் குறிப்பிட்டார். அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், ‘நம் நாட்டிற்கு வெளியே நமது நலனை விரும்பாதவர்கள் பலர் உள்ளனர்; இந்தியா வலிமையாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதையோ, தன் பொருளாதாரத் திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்வதையோ அவர்கள் விரும்புவதில்லை. இதுவே அவர்களின் விருப்பமாகவும் முயற்சியாகவும் இருந்தது, இதில் நமது நாட்டு மக்களும் மாட்டிக்கொண்டனர்’ என்று கூறினார்.

1977-இல் தனது தோல்விக்குப் பிறகு, ஒரு வெளிநாட்டு நேர்காணல் செய்பவரிடம் இந்திரா காந்தி இதனை விளக்கியதாகக் குகா எழுதுகிறார்: “அவர்களிடம் செலவழிக்கப் பெருமளவு பணம் இருந்தது… ஜனதா கட்சியின் சில பிரிவினருக்கு மேலைநாட்டுச் செய்திகளுலகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் பிற மேலைநாட்டு அமைப்புகளின் ஆதரவு இருந்தது. மற்றொரு பிரிவினருக்கு சோவியத் ஒன்றியத்தின் ஆதரவு இருந்தது.”

Source link