கொல்கட்டா: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில், திரிணமுல் காங்., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜி, 73, வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இங்கு, முதல்வர் மம்தா பானர்ஜியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில், திரிணமுல் காங்., மூத்த தலைவர் பார்த்தா சாட்டர்ஜி கல்வி அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்ததாக சி.பி.ஐ., – அமலாக்கத் துறை வழக்குப் பதிந்தன. இது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், 26,000 ஆசிரியர்களின் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில், 2022ல் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 2025 மே மாதத்தில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, பார்த்தா சாட்டர்ஜிக்கு அமலாக்கத் துறை மூன்று முறை சம்மன் அனுப்பியது. எனினும் அவர் ஒரு முறை கூட ஆஜராகவில்லை.
இதையடுத்து, கொல்கட்டாவில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மேலும் அவர் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.
