சென்னை: ராஜஸ்தானில் ஒரு யூனிட் ரூ.46 மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது மத்திய பாஜக அரசின் திட்டமிடல் தோல்வி என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மாநிலம் முழுவதும் பல மணி நேர மின் இணைப்பு துண்டிப்பு செய்யப்பட்டு வந்தது. மத்திய மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக ஏற்பட்ட மின்சாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க, ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக ரூ.37 வரை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது.
ஒரு யூனிட் ரூ. 37 எனும் விலையில் சுமார் 1,000 மெகாவாட் மின் கொள்முதல் செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். ஏன் இவ்வளவு அதிக விலைக்கு தமிழ்நாடு அரசு மின் கொள்முதல் செய்கிறது என அரசியல் கட்சியினர் பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 330 மெகாவாட் திறன் கொண்ட தோல்பூர் எரிவாயு மின் நிலையத்தில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு யூனிட் மின்சார உற்பத்திச் செலவு ரூ.46.09 வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் விவகாரத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், “ராஜஸ்தான் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூபாய் 46.09 செலவிடுவதாக ஆங்கில நாளேட்டின் கட்டுரை கூறுகிறது. இது மத்திய அரசின் தேசிய தேவை முன்னறிவிப்பு மற்றும் போதுமான திட்டமிடல் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
நாடு முழுவதும் மின்சாரத் தேவை மற்றும் உற்பத்தி கிடைக்கும் நிலவரம் குறித்த தகவல்களை மாநில அரசுகளைவிட மத்திய மின்துறை அமைப்புகள் விரிவாக அறிந்திருக்கக்கூடிய சூழலில், இத்தகைய மின்சாரப் பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து திட்டமிடாதது ஏன்? இத்தகைய தேவை- விநியோக இடைவெளிகள் ஏன் முன்கூட்டியே கணிக்கப்பட்டு திட்டமிடப்படவில்லை என்பதை மத்திய மின்சார அமைச்சகம் ஆராய வேண்டும்.
குறைந்தபட்சம் இப்போதாவது, மத்திய மின்சார அமைச்சகம் தேசிய அளவிலான முன்னறிவிப்பு மற்றும் மாநிலங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு குறித்து திட்டமிட வேண்டும். இது எதிர்காலத்தில் மாநிலங்கள் இதுபோன்ற கட்டுக்கடங்காத விலையுள்ள மின்சாரத்தைத் தவிர்க்க உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.
