லே: ஜம்மு – காஷ்மீரில் இருந்து யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட லடாக் பகுதிக்கு தனி ஆதார் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஜம்மு – காஷ்மீரின் அங்கமாக நீடித்த அடையாளம் ஆதார் அட்டையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசங்களாக 2019ல் அறிவிக்கப்பட்டன.
எனினும் லடாக் மக்களின் ஆதார் அட்டையில் அவர்கள் ஜம்மு – காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. இதனால், பல்வேறு அரசு சேவைகளை பெறுவதிலும் லடாக் மக்களுக்கு சிக்கல் நீடித்தது.
இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பின் இந்த குறைபாடு தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆதாரில் இதுவரை இருந்த ஜம்மு – காஷ்மீர் அடையாளம் நீக்கப்பட்டு, லடாக் மக்களுக்கு என தனி அடையாளம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன், யூனியன் பிரதேச நிர்வாகம் பேச்சு நடத்தியது. இதன் பலனாக, ஆதார் தரவுகளில் மாநிலத்தின் பெயர் ‘லடாக்’ என முறைப்படி மாற்றப்பட்டுள்ளது.
