வீட்டுக்கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்திய பிறகும் ‘ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ்’ (என்.ஓ.சி) பெறுவதில் சிக்கல் எதிர்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்.ப்.ஐ) அதிரடி நிபந்தனையை விதித்துள்ளது; குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் ஆவணங்களை வழங்கத் தவறினால் நாளொன்றுக்கு ரூ.5,000 அபராதம் செலுத்த நேரிடும்.
வீட்டுக் கடன், வாகனக் கடன் அல்லது தனிநபர் கடனுக்கான கடைசித் தவணையை (இ.எம்.ஐ) செலுத்தி முடிப்பது பெரும் நிம்மதியைத் தந்தாலும், கடன் வழங்கிய வங்கியிடமிருந்து ‘ஆட்சேபனை இல்லாச் சான்றிதழ்’ (என்.ஓ.சி – No Objection Certificate) பெறும் வரை அந்த கடன் கணக்கு முழுமையாக முடிவுக்கு வராது. ஒரு வாடிக்கையாளர் கடனுக்கான அனைத்துத் தொகையையும் நிலுவையின்றிச் செலுத்தி முடித்துவிட்டார் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் ஆவணமே இந்த என்.ஓ.சி சான்றிதழாகும். பொதுவாக, கடன் முழுமையாக அடைக்கப்பட்டதும் வங்கிகள் விவரங்களைச் சரிபார்த்து வாடிக்கையாளரின் பதிவுக் முகவரிக்கு இந்தச் சான்றிதழை அனுப்பி வைக்கும். எனினும், வாடிக்கையாளர்களும் கடன் அடைக்கப்பட்ட பிறகு நேரடியாக வங்கியை அணுகி என்.ஓ.சி மற்றும் நிலுவையின்மைச் சான்றிதழைப் (No-dues certificate) பெற விண்ணப்பிக்கலாம்.
கடன் தொகையை முழுமையாகச் செலுத்திய பிறகும் வங்கி சான்றிதழை வழங்க தாமதித்தால், ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) விதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். 2023 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு முடிவடையும் அனைத்துக் கடன்களுக்கும் ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் பொருந்தும். இதன்படி, கடன் கணக்கு முடிவடைந்த 30 நாட்களுக்குள் அசல் சொத்து ஆவணங்களைத் திரும்ப ஒப்படைப்பதுடன், அந்த சொத்தின் மீது வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பதிவுகளையும் (Registered charges) வங்கிகள் நீக்க வேண்டும் என பேங்க் பஜார் சி.இ.ஓ அடில் ஷெட்டி தெரிவித்துள்ளார். என்.ஓ.சி சான்றிதழ் வழங்குவதற்கும் இந்த 30 நாட்கள் காலவரம்பே பொருந்தும். ஒருவேளை வங்கியின் தவறு காரணமாக 30 நாட்களைத் தாண்டி தாமதம் ஏற்பட்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளருக்கு ரூ.5,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கடுமையான விதியை RBI அமல்படுத்தியுள்ளது.
கடன் அடைக்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் மூன்று முக்கியமான விஷயங்களை உறுதி செய்து பெற வேண்டும். கடன் கணக்கு மூடப்பட்டதை உறுதி செய்யும் ‘கடன் முடிவுக் கடிதம்’ (Loan closure letter), எவ்வித நிலுவையும் இல்லை என்பதை உறுதி செய்யும் என்.ஓ.சி சான்றிதழ் மற்றும் அடமானமாக வைக்கப்பட்ட அசல் ஆவணங்களைத் திரும்பப் பெறுதல் ஆகியவை அவசியமாகும். வாகனக் கடனைப் பொறுத்தவரை, வாகனப் பதிவுச் சான்றிதழில் (ஆர்.சி) குறிப்பிடப்பட்டுள்ள அடமானப் பதிவை (Hypothecation) நீக்குவதை வாடிக்கையாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.
ஆவணங்கள் தொலைந்துபோதல் அல்லது சேதமடைதல் போன்ற காரணங்களால் சில சமயங்களில் நியாயமான தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், அசல் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை (Certified copies) ஏற்பாடு செய்ய வங்கிகளுக்குக் கூடுதலாக 30 நாட்கள் அவகாசத்தை ரிசர்வ் வங்கி வழங்குகிறது. அதேபோல, அதே வாடிக்கையாளருக்கு வேறு ஏதேனும் நிலுவைகள் இருந்தால் ஆவணங்களை நிறுத்தி வைக்க வங்கிக்குச் சட்டப்பூர்வ உரிமை உண்டு. ஆனால், தாமதத்திற்கான காரணத்தைத் தெரிவிக்காமல் வங்கிகள் அமைதி காக்க முடியாது; 30 நாட்களுக்கு மேலாகும் தாமதத்திற்கு வங்கி தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
கடன் தொகையை முழுமையாகச் செலுத்தியும் வங்கி என்.ஓ.சி வழங்கவில்லையெனில், வாடிக்கையாளர்கள் முதலில் கடன் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் வங்கி நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும். புகார் அளித்து 30 நாட்களுக்குள் வங்கி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலோ அல்லது உரிய இழப்பீடு வழங்க மறுத்தாலோ, வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியின் வங்கியியல் குறைதீர்ப்பாளரை (RBI Ombudsman) நேரடியாக அணுகி புகார் அளிக்கலாம். இதுதவிர, நுகர்வோர் நீதிமன்றத்தையும் நாடி தங்களது உரிமைகளுக்கான நிவாரணத்தைப் பெற முடியும்.
