சென்னையில் 'ஸ்டார் கண்டென்டர்' டேபிள் டென்னிஸ்

சென்னை: சர்வதேச டேபிள் டென்னிஸ் ‘ஸ்டார் கண்டென்டர்’ தொடர் இன்று சென்னையில் துவங்குகிறது.

சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில், 2021 முதல் ‘ஸ்டார் கன்டெண்டர்’ தொடர் நடத்தப்படுகிறது. தற்போது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இத்தொடர் இன்று சென்னையில் துவங்குகிறது. மொத்த பரிசுத் தொகை, ரூ. 2.90 கோடி. 17 நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆண்கள், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளில் போட்டி நடக்க உள்ளன.

இந்தியா சார்பில் பிரதான, தகுதிச் சுற்று போட்டிகளில் அதிகபட்சம் 27 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். அடுத்து, தென் கொரியாவில் இருந்து 17 பேர், ஜப்பானில் இருந்து 13 பேர் பங்கேற்கின்றனர். உலகின் ‘நம்பர்-33’ வீரர் மானவ் தக்கார், மனுஷ் ஷா, தமிழகத்தின் சத்யன், ஹர்மீத் தேசாய், அனிர்பன் கோஷ், திவ்யான்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரியானுஜ் உள்ளிட்ட வீரர்கள், இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர்.

பெண்கள் பிரிவில் ஆசிய யூத் சாம்பியன் திவ்யான்ஷி, அனுஷா, சயாலி, காவ்யா, தியா சிட்டாலே விளையாடுகின்றனர். இத்தொடரில் கோப்பை வெல்லும் பட்சத்தில் ரூ. 15.41 லட்சம் (ஒற்றையர்), ரூ. 4.98 லட்சம் (இரட்டையர்) பரிசு வழங்கப்படும்.

Source link