தவெக தலைவர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ சிபிஎஃப்சி-யிடம் சிக்கி பெரும் பிரச்சனையை சந்தித்தது. படத் தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சென்றும் பலன் கிடைக்கவில்லை. சிபிஎஃப்சி-யும் விடாமல் முட்டுக்கட்டை போட்டது. இறுதியில் படக்குழு வழக்கை வாபஸ் பெற்று மறு சான்றிதழுக்கு சிபிஎஃப்சி-யிடம் சமர்பித்தது. படம் பார்த்த சிபிஎஃப்சி தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என பரிந்துரைத்தது. ஆனால் அதன்பிறகு எந்த தகவலும் வெளியாகவில்லை. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தொடர் தாமதமாகி வந்ததால் வெளிநாட்டு உரிமை, ஓடிடி உரிமை என பல வியாபரங்கள் பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் ஜன நாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்தது. பின்பு மொத்த படமும் வெளியானது. இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், விஜயன் சுப்ரமணியன் படத்தை கசிய விட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் படத்தை பதிவிறக்கம் செய்வதோ, அனுப்புவதோ, சேமிப்பதோ இதுபோன்று எது செய்தாலும் சட்டப்படி குற்றம் எனக்கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். பின்பு படத் தயாரிப்பு நிறுவனமும் அதே எச்சரிக்கையோடு அறிவிக்கை வெளியிட்டது. இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை கண்டித்து பல திரைபிரபலங்கள், சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சிபிஎஃப்சி (மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்) விளக்கம் அளித்துள்ளது. அதில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தில் இருந்து ஜனநாயகன் படம் கசிந்ததாகக் கூறும் செய்தி முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் தவறான செய்தி. சான்றிதழுக்காகச் சமர்ப்பிக்கப்படும் அனைத்துத் திரையரங்குத் திரைப்படங்களுக்கும் சிபிஎஃப்சி ஒரு பாதுகாப்பான கேடிஎம் (Key Delivery Message) முறையைப் பின்பற்றுகிறது. அதன் உள்ளடக்கத்திற்கான அணுகல் கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது கேடிஎம், தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநரிடமே முழுமையாக இருக்கும். செல்லுபடியாகும் கேடிஎம் இல்லாமல், திரைப்படத்தை அணுகவோ பார்க்கவோ முடியாது. ஜன நாயகன் திரைப்படத்தின் டிஜிட்டல் சினிமா தொகுப்பு (DCP), உரிய ஒப்புதலுடன் மார்ச் 17 அன்று மும்பையில் விண்ணப்பதாரரிடம் ஒப்படைக்கப்பட்டு, அன்று முதல் அவர்களிடமே இருந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளது.
