ராணுவ ரகசியங்களைப் பகிர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி; விசாரணையில் பகீர் தகவல்!

ராணுவ ரகசியங்களை வெளிநாட்டுப் பெண்ணுக்கு பகிர்ந்ததாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் கீழ்வல்லம் என்ற பகுதியைச் சேர்ந்த பாபு (52). இவர் ராணுவத்தில் 28 ஆண்டுகளாக பணிபுரிந்து கேப்டனாக பதவி உயர்வு பெற்று கடந்த 2022ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவர் தற்போது சென்னையில் உள்ள கல்லூரிகளில் என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இந்த சூழலில், பாபு ராணுவ ரகசியங்களை சேகரித்து கடந்த சில மாதங்களாக வேறு ஒருவருக்கு பகிர்ந்து வருவதாக மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை அடுத்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பாபுவிடம் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், சமூக வலைத்தளம் மூலம் வெளிநாட்டு இளம் பெண் ஒருவருடன் பாபுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சமூக வலைத்தளம் மூலமாக மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுத தளவாடங்களின் விவரங்களையும் அதன் துல்லிய தாக்குதல் திறன் குறித்தும் அந்த பெண் கேட்டுள்ளார். பாபுவும் அதன் விவரங்களை சேகரித்து வாட்ஸ் அப் மூலம் அப்பெண்ணிடம் பகிர்ந்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான பாபுவை மத்திய உளவுத்துறையினர் அதிரடியாக கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பெண் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.