திருச்சி : தமிழகத்தில் மீண்டும் லாட்டரி திட்டத்தை கொண்டு வர முயற்சி நடப்பதாக, துணை முதல்வர் உதயநிதி குற்றஞ்சாட்டினார்.
திருச்சி மாவட்டத்தில், லால்குடி – பாரிவள்ளல், மண்ணச்சநல்லுார் – கதிரவன், ஸ்ரீரங்கம் – துரைராஜ், திருச்சி மேற்கு – நேரு என போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம், சசிகலா காலில் பழனிசாமி விழுந்த போட்டோவை காட்டி, உதயநிதி விமர்சித்து பேசினார்.
உதயநிதி பேசியதாவது: தமிழகத்தில் மீண்டும் லாட்டரி தொழிலை கொண்டு வந்து, மக்களை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், லால்குடி தொகுதியில், அதிமுக சார்பில் லீமா ரோஸ் களமிறங்கி உள்ளார். அவர் குடும்பத்தில், ஒவ்வொருவரும், ஒவ்வொரு கட்சியில் இருக்கின்றனர். பெரும் பணக்காரரான லீமா ரோஸ், லால்குடி மக்களை பணத்தால் வெற்றி பெறலாம் என தப்புக்கணக்குப் போடுகிறார். தமிழகத்தில், நேரடியாக பாஜ வர முடியாது என்பதால், அதிமுக என்ற போர்வையை போர்த்திக்கொண்டு வரப்பார்க்கிறது. இதைச் சொன்னால், இபிஎஸ்க்கு கோபம் வருகிறது. ‘உதயநிதிக்கு எந்த அனுபவமும் இல்லை’ என்கிறார். அவரை போல, காலில் விழும் அனுபவமோ, சங்கிக் கூட்டத்துக்கு பயப்படும் அனுபவமோ எனக்கு கிடையாது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். ஆனால், மத்திய பாஜ அரசு, தமிழகத்துக்கு ஏதாவது திட்டங்களை தந்தார்கள் என்று சொல்ல முடியுமா?. தேர்தல் என்றால் மட்டும் மோடியும், அமித் ஷாவும் மாறி மாறி வருகின்றனர். அதனால் தான், இந்த தேர்தலை தமிழகத்துக்கும், டில்லிக்கும் போட்டி என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார் . இவ்வாறு அவர் பேசினார்.
