வாஷிங்டன் : ஈரான் கொடுத்த பதிலடியினாலும், விபத்துக்களினாலும் 39 விமானங்கள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா இழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்., 28ல் ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் போரை துவக்கின. போர் துவங்கி கிட்டத்தட்ட 40 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு வாரங்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, பாகிஸ்தானில் அமைதி பேச்சு நடந்து வருகிறது.அமெரிக்கா இதுவரை 39 போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 24 ரீப்பர் ட்ரோன்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு மட்டும் 8 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. ஒரு ட்ரோனின் விலை 279 கோடி ரூபாயாகும்.
ஈரானிய வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு விமானம் மற்றும் குவைத் தவறுதலாக சுட்டு வீழ்த்திய 3 விமானங்கள் உட்பட 4 எப் 15 – இ ரக போர் விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது. மேலும், ஈரான் தாக்குதலில் சிக்கி குவைத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏ – 10 வார்த்ஹாக் விமானம் சேதமடைந்தது. கே.சி., – 135 எரிபொருள் நிரப்பும் விமானம் ஈராக்கில் நடந்த விபத்தில் விழுந்து நொறுங்கியதில் 6 அமெரிக்க வீரர்கள் பலியாகினர்.
சவுதியின் பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இ 3 விமானம் ஒன்று அழிக்கப்பட்டது. மீட்பு பணியின் போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஈரானிய பகுதியில் வைத்து அமெரிக்காவாலேயே சி – 130 ரக இரு விமானங்கள் வெடிக்கச் செய்யப்பட்டன. இதனால், அமெரிக்காவுக்கு 18,600 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், 13 வீரர்களையும் இழந்துள்ளது.
