நடிகர் தனுஷ் அரசியலில் களம் இறங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவரது செயல்பாடுகளும் அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் அமைந்து வருகிறது. இதனிடையே தொடர்ந்து தனது ரசிகர்களை சந்தித்து வரும் சூழலில், தனுஷ் ரசிகர் மன்றத்தை தனுஷ் நற்பணி இயக்கமாக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், தனுஷின் நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் சென்னை செம்மஞ்சேரியில் நேற்று (25-10-26) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் அனைவருக்கும் சிறிய அளவிலான வெள்ளி விளக்குகளை நடிகர் தனுஷ் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சி முடிந்த பின்பு தனுஷ் வெளியே வந்தபோது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். அதனைத் தொடர்ந்து, தனது காரின் மேல்பகுதியிலிருந்து நின்றபடி மகிழ்ச்சியுடன் கையசைத்தவாறே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த கூட்டத்திற்கு பெண் நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆண்கள் யாரையும் உள்ளே அனுமதிப்படவில்லை. இருப்பினும் பெண் நிர்வாகிகளை அழைத்து வந்த ஆண் நிர்வாகிகள், தனுஷை பார்ப்பதற்காக மண்டப நுழைவாயிலில் குவிந்து காத்திருந்தனர். அப்போது தனுஷ் நற்பணி இயக்கத்தின் செயலாளரான ராஜா என்பவர், அங்கிருந்து கூடியிருந்த ஆண் நிர்வாகிகளை வெளியேறும்படி கூறினார். ஆனால் சில நபர்கள் வெளியேறாமல் அங்கே இருந்ததால் அவர்களை ராஜா அடித்து அங்கிருந்து துரத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
