வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ‘ரானா’ புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயல் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் உள்ள முக்கியத் துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
9 துறைமுகங்களில் எச்சரிக்கை
சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் இந்த 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்து.
புயலின் நகர்வு மற்றும் எச்சரிக்கை
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல், படிப்படியாக வலுவடைந்து தீவிர மற்றும் மிக தீவிரப் புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த’ரானா’ புயல் நாளை மறுநாள் விசாகப்பட்டினம்அருகே கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
புயல் உருவாகியுள்ளதை அடுத்து, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலோரப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புயல் எச்சரிக்கைக் கூண்டுகள்: எண்களும் அவற்றின் ஆபத்து அளவுகளும்
1-ஆம் எண் கூண்டு: புயல் உருவாகக்கூடிய சாதகமான வானிலைப் பகுதி ஒன்று கடலில் உருவாகியுள்ளது என்பதை உணர்த்துகிறது.
2-ஆம் எண் கூண்டு: கடலில் புயல் அதிகாரப்பூர்வமாக உருவாகிவிட்டது என்பதை எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது.
3-ஆம் எண் கூண்டு: திடீர் சூறாவளிக் காற்றோடு பலத்த மழை பெய்து துறைமுகப் பகுதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று பொருள்.
4-ஆம் எண் கூண்டு: துறைமுகம் நேரடியாகப் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகக்கூடும் என்பதற்கான உள்ளூர் எச்சரிக்கையாகும்.
5-ஆம் எண் கூண்டு: புயலானது துறைமுகத்தின் இடதுபக்கமாகக் கரையைக் கடந்து செல்லும்; இதனால் துறைமுகப் பகுதி கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை உணர்த்துகிறது.
6-ஆம் எண் கூண்டு: புயலானது துறைமுகத்தின் வலதுபக்கமாகக் கரையைக் கடந்துசெல்லும் நேரத்தில், அப்பகுதியில் கடுமையான வானிலை நிலவும் என்று எச்சரிக்கிறது.
7-ஆம் எண் கூண்டு: புயலானது துறைமுகத்தின் வழியாகவே அல்லது மிக அருகிலோ நேரடியாகக் கரையைக் கடக்கக்கூடும் என்பதற்கான தீவிர எச்சரிக்கையாகும்.
8-ஆம் எண் கூண்டு: புயல் ‘தீவிர’ அல்லது ‘அதி தீவிர’ புயலாக உருவெடுத்துள்ளது என்று பொருள். இது துறைமுகத்தின் இடதுபக்கமாகக் கரையைக் கடக்கும்போது மிகக் கடுமையான சேதங்களை ஏற்படுத்தக்கூடும்.
9-ஆம் எண் கூண்டு: தீவிர அல்லது அதி தீவிரப் புயலானது துறைமுகத்தின் வலதுபக்கமாகக் கரையைக் கடக்கும்போது அப்பகுதியில் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.
10-ஆம் எண் கூண்டு: புயல் நேரடியாகத் துறைமுகம் அல்லது அதன் மிக அருகில் கடந்து செல்வதால், பேரழிவு தரும் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளதை எச்சரிக்கிறது.
11-ஆம் எண் கூண்டு (உச்சகட்ட எச்சரிக்கை): இதுவே புயல் எச்சரிக்கையின் மிக உயர்ந்த அளவாகும். இந்த எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால், வானிலை மையம் மற்றும் தகவல் தொடர்புத் தொடர்புகள் முற்றிலும் முறிந்துவிட்டன என்பதை உணர்த்துகிறது.
கடலோரப் பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களும், மீனவர்களும் இந்த எச்சரிக்கைக் கூண்டுகளின் தன்மையை அறிந்து, அதற்கு ஏற்பத் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
