நீலகிரி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மலை மாவட்டமான நீலகிரியில் பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பர்லியாறு அருகே ஏற்பட்ட மண்சரிவால், மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்லாறு அருகே தண்டவாளத்தில் மண், பாறைகள் சரிந்து விழுந்ததால், மலை ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால், பல இடங்களில் மண்சரிவுக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபத்துமிக்க பகுதிகளில் மாலை 6 மணி முதல் காலை 7 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் 3வது நாளாக இன்றும் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதைகளான மேட்டுப்பாளையம் – கோத்தகிரி, காரமடை – மஞ்சூர் மாற்றுப்பாதைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை, நிலச்சரிவு அபாயத்தினால் நீலகிரியில் அனைத்து சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ளது.
