”முதல்வரை உளவு பார்க்க ரகசிய கேமரா”; யார் செய்த சதி?

தன்னை ரகசியமாகப் படம் பிடித்து மிரட்ட முயற்சிப்பதாக கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சிவகுமார், ”கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஒரு தொழில் அதிபர் என்னைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் ஏ.ஐ. நவீன வசதியுடன் கூடிய கண் கண்ணாடியை அணிந்திருந்தார். அந்த கண்ணாடியைப் பார்த்ததும் நான் சுதாரித்துக்கொண்டேன். பின்பு, அவரைப்பற்றியும், அந்த கண்ணாடியைப் பற்றி விசாரித்தேன். அது ஏ.ஐ வசதியுடன் கூடிய மெட்டா ஸ்மார்ட் வகை கண்ணாடி என்பது தெரியவந்தது. அதே நேரத்தில், இந்த தொழில் அதிபர் அதே கண்ணாடியை அணிந்துகொண்டு கேரள முதல்வரிடமும் பேசியுள்ளார்.  

ஆனால், அந்த தொழிலதிபர் ஆந்திர முதல்வர் சந்திரபாபுவை சந்திக்கும் போது அந்த கண்ணாடியை அணிந்திருக்கவில்லை. எனவே, அந்த தொழில் அதிபர் என்னையும், கேரள முதல்வர் வி.டி.சதீசனையும் உளவு பார்த்து பிரச்சனையில் சிக்க வைக்க முயற்சிக்கிறார் என்பதை உணர்ந்தேன். மேலும், அந்த தொழில் அதிபர் 5 அமைச்சர்களையும் சந்தித்துப் பேசி உள்ளார். அதனால், ரகசிய வீடியோ விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி அமைச்சர்களை எச்சரித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.   

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், இந்த சம்பவத்திற்கு பின்னால் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி முதல்வர்களும், தலைவர்களும் குறிவக்கப்படுகிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், இது திட்டமிட்ட சதியாகவும் இருக்கலாம் என சிலர் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.