எழுதியவர்: ஜெய்பிரகாஷ் எஸ் நாயுடு
கணவர் காவலில் இருந்தபோது உயிரிழந்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி நீதி கோரிய 35 வயது லேஹ்ரா பாய்க்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க சத்தீஸ்கர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கைக் கையாண்ட விதத்துக்காக மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), சிறைத்துறை தலைமை இயக்குநர் மற்றும் உள்துறை முதன்மைச் செயலர் ஆகியோரைக் கடுமையாகச் சாடிய நீதிமன்றம், அவர்களின் செயல்பாடுகளை “புனிதத்தன்மைக்கு எதிரானது” என்றும், அவர்களின் வாதங்கள் “வெளிப்படையாகப் பொய்யானவை; முற்றிலும் கண்டிக்கத்தக்கவை” என்றும் குறிப்பிட்டது. மேலும், வழக்கை சிபிஐ விசாரிக்கவும், குற்றமிழைத்த அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது லேஹ்ரா பாய் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. பள்ளிக்குச் செல்லாத அவர், இரண்டு பெண் குழந்தைகளின் தாய். கணவர் காவலில் இருந்தபோது உயிரிழந்த சம்பவம் கவனிக்கப்படாமல் போய்விடக் கூடாது என்பதற்காக அவர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடியுள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்
ஜனவரி 18, 2024 அன்று, பிலாஸ்பூர் மாவட்டம் மொஹ்ரா கிராமத்தில் தனது வீட்டையொட்டிய கடையில் ஷ்ரவன் சூர்யவன்ஷி தாம்ரே இருந்தார். அப்போது சிபாட் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார் திடீரென அங்கு வந்ததாக லேஹ்ரா நினைவுகூர்கிறார்.
அப்போது பக்கத்து வீட்டில் இருந்த லேஹ்ரா வெளியே ஓடி வந்தபோது, 34 வயதான தனது கணவரை போலீஸார் வாகனத்தில் ஏற்றிச் செல்வதைப் பார்த்தார்.
“இதற்கு முன்பும் அவரைப் பிடித்துச் சென்று பின்னர் விடுவித்திருக்கிறார்கள். அதனால், ஒரு நாளில் திரும்பிவிடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால், அதுதான் அவரை நான் கடைசியாகப் பார்த்தது” என்கிறார் லேஹ்ரா.
சத்தீஸ்கர் கலால் சட்டம், 1915-ன் பிரிவு 34(2)-ன் கீழ், ரூ.1,200 மதிப்புள்ள 6 லிட்டர் மஹுவா மதுபானத்தை வைத்திருந்ததாகக் கூறி தாம்ரே கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தின்படி, முதல் முறை குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும் குறைந்தது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். அது மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். மேலும், குறைந்தபட்சம் ரூ.25,000 அபராதமும், அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
தனது சகோதரர் ஜக்பிரசாத், தாம்ரேவைப் பார்ப்பதற்காகக் காவல் நிலையத்துக்குச் சென்றபோது அவரைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என லேஹ்ரா கூறுகிறார்.
“சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் ஷ்ரவன் இருப்பதை என் சகோதரர் பார்த்தார். நாங்கள் அனுப்பிய உணவைச் சாப்பிட அவர் மறுத்துவிட்டதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்” என்கிறார் அவர்.
அருகில் வசிக்கும் தாம்ரேவின் தந்தை அம்ரித்லால், போலீஸார் வந்தபோது பள்ளியில் இருந்ததால், தனது மகன் கைது செய்யப்பட்டதை மறுநாள்தான் அறிந்தார்.
பின்னர், ஜனவரி 21 இரவு, போலீஸாரால் தொடர்புகொள்ளப்பட்ட கிராமவாசி ஒருவர் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தார். தாம்ரே பிலாஸ்பூரில் உள்ள சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார். அந்த மருத்துவமனை கிராமத்திலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது.
தாம்ரேவின் மற்றொரு மகன் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றபோதும், அவரை உள்ளே செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை என அம்ரித்லால் கூறுகிறார். ஜனவரி 22 அதிகாலை சுமார் 3 மணியளவில், சாஹில்தேவ் எப்படியோ மருத்துவமனைக்குள் சென்று பார்த்தபோது தாம்ரே உயிரிழந்திருந்தார்.
மருத்துவமனைப் பதிவுகளின்படி, ஜனவரி 22 காலை 6 மணிக்கு தாம்ரே உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அவரைக் கைது செய்த பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது என்பது மட்டும்தான் தெரியும். அவரது உடலைக்கூட என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை” என்கிறார் லேஹ்ரா.
மருத்துவ அறிக்கையில் தாம்ரேவின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில், “தலையில் ஏற்பட்ட காயம் மற்றும் அதன் சிக்கல்களால் இதய-சுவாசச் செயலிழப்பு” ஏற்பட்டதே மரணத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தக் காயம் மழுங்கிய பொருளால் ஏற்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தலையின் பின்பகுதியில் உள்ள உச்சந்தலையில் கிழிந்த காயம், ரத்தப்போக்கு, தையல் போடப்படாத காயம், உடலின் பல இடங்களில் சிராய்ப்புக் காயங்கள், வீக்கம் மற்றும் ஆணுறுப்பில் ரத்தப்போக்கு ஆகியவையும் பதிவாகியிருந்தன.
நீதிமன்றத்தில் நீண்ட போராட்டம்
தாம்ரே உயிரிழந்த சில நாட்களுக்குப் பிறகு, செய்தித்தாளில் இந்தச் சம்பவம் குறித்த செய்தியைப் படித்த வழக்கறிஞர் ராஜீவ் குமார் துபே, லேஹ்ராவைத் தொடர்புகொண்டு இலவசமாக வழக்கில் ஆஜராக முன்வந்தார்.
தாம்ரே காவலில் இருந்த ஜனவரி 18 முதல் ஜனவரி 21, 2024 வரையிலான காலப்பகுதியில் சிபாட் காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக் கோரி முதலில் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரிக்குக் கடிதம் எழுதியதாக துபே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
“எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதன்பிறகு பிலாஸ்பூர் காவல் கண்காணிப்பாளர் மற்றும் சத்தீஸ்கர் டிஜிபி ஆகியோரையும் அணுகினோம். எங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இதையடுத்து, ஆகஸ்ட் 2024-ல் உயர் நீதிமன்றத்தை அணுகினோம்” என்றார் அவர்.
டிசம்பர் 2024-ல், உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அதிகாரிகளின் “அலட்சியமே” தாம்ரேவின் மரணத்துக்குக் காரணம் என்று குறிப்பிட்டு, அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசுக்குப் பொறுப்பு இருப்பதாகத் தீர்ப்பளித்தது.
இந்த இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல என்று கருதிய லேஹ்ரா, துபேவின் உதவியுடன் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, உயர் நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை “மிகக் குறைவானது” என்று விமர்சித்தது. மேலும், “காவல் மரணத்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டது” என்றும் சுட்டிக்காட்டியது.
ஜூலை 22, 2024 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நீதித்துறை விசாரணை அறிக்கையில், தலையில் ஏற்பட்ட காயமே தாம்ரேவின் மரணத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்மையில் எந்தச் சர்ச்சையும் இல்லை என்றும், உயர் நீதிமன்றமும் விசாரணை அறிக்கையைக் கணக்கில் எடுத்திருந்தது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
இத்தகைய சூழலில், “உள்துறை முதன்மைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சிறைத்துறை தலைமை இயக்குநர் ஆகியோர் எதுவும் தெரியாததுபோல் நடந்துகொண்டிருப்பது புனிதத்தன்மைக்கு எதிரானது. காவல் மரணங்கள் தொடர்பான சட்டப்பூர்வ நடைமுறைகளை அவர்கள் கவலைக்கிடமான வகையில் புறக்கணித்திருப்பதை இது காட்டுகிறது” என்று நீதிமன்றம் கூறியது.
தாம்ரேவின் மரணம் தொடர்பாகக் குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும், விசாரணை அறிக்கை தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் டிஜிபி கூறியிருந்தார். இந்த நிலைப்பாட்டை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
சிறைத்துறை தலைமை இயக்குநர், நீதித்துறை விசாரணை அறிக்கையை அடுத்தகட்ட நடவடிக்கைக்காகக் காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பாதது தொடர்பாக அளித்த விளக்கத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. அந்த விளக்கம், “கடுமையான தவறை நியாயப்படுத்தும் மேலோட்டமான, விதிமுறைகளைக் குறுகிய முறையில் அணுகும் பதில்” என்று குறிப்பிட்டது. உள்துறை முதன்மைச் செயலரும் இதேபோன்ற அலட்சியமான அணுகுமுறையைக் கடைப்பிடித்ததாக நீதிமன்றம் சாடியது.
மேலும், அதிகாரிகள் “உண்மைகளை மறைக்கும் கதையை உருவாக்கி, நீதிமன்றத்தின் கண்களில் மண்ணைத் தூவ முயற்சிக்கிறார்கள்” என்றும் நீதிமன்றம் குற்றம்சாட்டியது. டிஜிபி தாக்கல் செய்த வாதம் “வெளிப்படையாகப் பொய்யானது; முற்றிலும் கண்டிக்கத்தக்கது” என்றும் தெரிவித்தது.
அக்டோபர் 13-ம் தேதி நடைபெற்ற கடைசி விசாரணையின்போது, விசாரணையை நிறைவு செய்ய சிபிஐக்கு மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 2, 2027 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அப்போது சத்தீஸ்கர் டிஜிபியாக இருந்த அசோக் ஜுனேஜா ஓய்வுபெற்றுவிட்டார். தற்போதைய டிஜிபி அருண் தேவ் கவுதம் இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அப்போது சிபாட் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரியாக இருந்த ஆய்வாளர் நரேஷ் சவுகான், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில், “நான் சிசிடிவி காட்சிகளைச் சரிபார்த்தேன். சந்தேகத்துக்குரிய எதுவும் அதில் இல்லை. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு தாம்ரேவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கை இயல்பாக இருந்தது. அவருக்கு எந்தக் காயமும் இல்லை” என்றார்.
மேலும், 2023-ல் நடைபெற்ற இரண்டு சம்பவங்களுக்குப் பிறகு, கலால் சட்டத்தின் கீழ் தாம்ரே மீது பதிவு செய்யப்பட்ட மூன்றாவது வழக்கு இது என்றும் சவுஹான் குறிப்பிட்டார்.
குடும்பத்தை வாட்டும் வாழ்வாதாரப் போராட்டம்
தாம்ரேவின் மரணம், அவரது இரண்டு மகள்களையும் வளர்த்துப் பராமரிப்பதற்கான போராட்டத்தில் லேஹ்ராவைத் தள்ளியுள்ளது. தாம்ரேவின் குடும்பத்தினர் விரும்பாத நிலையிலும் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். லேஹ்ராவுக்கு ஏற்கெனவே ஒரு திருமணம் நடந்திருந்ததும், அவர் தாம்ரேவைவிட வயதில் மூத்தவர் என்பதும் அவரது குடும்பத்தினரின் அதிருப்திக்குக் காரணமாக இருந்தது.
இந்தப் பிரச்சினை இன்னும் நீடிக்கிறது. தாம்ரேவின் தந்தை அம்ரித்லால், இழப்பீட்டுத் தொகையில் தனக்கும் பங்கு வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தாம்ரே, அம்ரித்லாலின் ஐந்து குழந்தைகளில் மூத்தவர். இழப்பீடு தொடர்பான இறுதி நிவாரணம் குறித்து முடிவெடுக்கப்படும் வரை இந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
லேஹ்ரா விவசாயக் கூலியாகவும் தினக்கூலித் தொழிலாளியாகவும் வேலை செய்து வருகிறார். ஒரு நாளைக்கு சுமார் ரூ.300 சம்பாதிப்பதாக அவர் கூறுகிறார்.
“ஆனால், தினமும் வேலை கிடைப்பதில்லை. என் மகள்களைக் கவனித்துக்கொள்ள முடியாமல் தவிக்கிறேன். அவர்கள் படிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்கிறார் அவர்.
தனது மகள்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று தாம்ரேவும் விரும்பியதாக லேஹ்ரா கூறுகிறார். அவர்களுக்கு 13 மற்றும் 11 வயது. சந்தியா, சாக்ஷி எனப் பெயரிட்டிருந்த தனது மகள்கள் மீது தாம்ரே மிகுந்த பாசம் வைத்திருந்தார். குடும்பத்துக்கென சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டுவதற்காக அவர் கடுமையாக உழைத்ததுடன், வீட்டுக்காக வாங்கிய கடனையும் அடைத்திருந்தார்.
“எங்கள் மகள்கள் நன்றாகப் படித்து, மருத்துவர் அல்லது மாவட்ட ஆட்சியர் போன்ற பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்” என்கிறார் லேஹ்ரா.
தாம்ரே தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களிடமும் மிகுந்த பாசத்துடன் இருந்ததாக அம்ரித்லால் கூறுகிறார். பத்தாம் வகுப்பை முடித்தவுடன் கொத்தனார் வேலைக்குச் சென்ற தாம்ரே, தனது குடும்பத்துக்கு உதவுவதற்காக நீண்ட தூரங்களுக்குப் பயணம் செய்து, பல நாட்கள் வீட்டை விட்டுத் தங்கியும் வேலை செய்ததாக அவர் தெரிவித்தார்.
தாம்ரேவுக்கு முன்மாதிரியாக இருந்தவர் தான்தான் என்றும் அம்ரித்லால் கூறுகிறார்.
“என்னைப் போலவே தனது மகள்களும் நன்றாகப் படித்து, அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்று அவர் விரும்பினார்” என்றார் அம்ரித்லால்.
இழப்பீட்டுத் தொகையில் தனக்கும் பங்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அம்ரித்லால், “எனது குழந்தைகளை வளர்ப்பதற்காகச் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தையும் செலவிட்டேன்” என்கிறார்.
இருவரும் விரும்புவது ஒன்றைத்தான் – நீதி. “குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்பதை அரசாங்கம் முடிவு செய்யட்டும்” என்கிறார் லேஹ்ரா.
