பீகாரில் உறைவிடப் பள்ளி விடுதியில் ஐந்து வயது சிறுவன் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட பயங்கரம் அரங்கேறியுள்ளது.
பீகாரின் ஜெஹானாபாத்தில் அமைந்துள்ள அந்த பள்ளி விடுதி உணவக ஊழியரான முகேஷ் (46) என்ற சுதாமா என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவன் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 6 (ஞாயிற்றுக்கிழமை) விடுதியில் தங்கியிருந்த 5 வயது சிறுவனை ஆசை வார்த்தை கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்ற முகேஷ் அவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளான்.
இதன் பின் சிறுவனின் கழுத்தை அறுத்து உடலில் கடுமையான காயங்களை ஏற்படுத்தி கீழே விழுந்து ஏற்பட்ட விபத்துபோல சித்தரிக்க விடுதி படிக்கட்டில் வீசியுள்ளான்.
சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மறுநாள் (கடந்த திங்கள்கிழமை) உயிரிழந்தான்.
மாணவனின் உடலில் பல இடங்களில் அறுக்கப்பட்டிருந்ததாகவும், அவனது பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருப்பதாகவும், வயிற்றின் இடது பக்கத்தில் காயம் இருந்ததாகவும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதியில் உள்ள குழந்தைகள் தன்னை ‘பலவீனமானவன்’ என்று கூறி கேலி செய்ததாகவும், அது தனது விரக்தியை அதிகரித்ததாகவும் முகேஷ் வாக்குமூலம் அளித்துள்ளான்.
மேலும் சிறுவனை துன்புறுத்தும்போது தான் குடிபோதையில் இருந்ததாகவும் அவன் கூறியுள்ளான்.
சிறுவன் விபத்தில் காயமடைந்தான் எனக் கூறி சம்பவத்தை மறைக்க முயன்ற பள்ளி முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவனை சம்பவம் நடக்கும் ஒரு வாரம் முன் ஏப்ரல் 1 அன்றுதான் பெற்றோர் அந்த பள்ளியில் சேர்த்து விடுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
5 நாட்கள் கழித்து சம்பவம் நடந்த அடுத்த நாள் ஏப்ரல் 6 அன்று தான் சிறுவன் மருத்துவமனையில் இருப்பது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே தினம் சிறுவன் இறந்ததாக அறிவிக்கப்பட்டது பெற்றோருக்கு பேரிடியாக அமைந்தது. இந்த கொடூர சம்பவம் பீகார் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
