“நாட்டை சைபர் பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்" – பிரதமர் மோடி

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதன் மூலமும் அதை பலவீனப்படுத்த முடியும். நவீன சவால்களைப் பழைய அமைப்புகளையோ அல்லது பாரம்பரிய பயிற்சி முறைகளையோ கொண்டு எதிர்கொள்ள முடியாது. அதற்கு அதிநவீன உள்கட்டமைப்பும், திறன்மிக்க மனிதவளமும் தேவை. கடந்த பத்து ஆண்டுகள் வங்கிச் சேவைகள் கிடைக்காத சாமானிய மக்களுக்கு அச்சேவையை கொண்டு சேர்ப்பதற்கான காலமாக இருந்தது.

மோடி
மோடி

இனி வரும் பத்தாண்டுகள் வங்கித் துறையை மேலும் திறனுள்ளதாகவும் நம்பகத்தன்மை கொண்டதாகவும் மாற்றுவதற்கான காலமாக இருக்கும். இதற்கு சக்திவாய்ந்த தரவு மையங்களும், கணிப்பொறி அமைப்புகளும் மிகவும் முக்கியம். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் தவறான நிர்வாகமே வங்கித் துறை சரிவின் விளிம்பிற்குச் சென்றதற்கும், வாராக்கடன் (NPA) சவால் அதிகரித்ததற்கும் காரணம். 2014-க்கு முன்பிருந்த ஆட்சியில் ‘போன் பேங்கிங்’ முறை நடைமுறையில் இருந்தது. டெல்லியில் இருந்த செல்வாக்குமிக்க காங்கிரஸ் தலைவர்களின் ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் கோடிக்கணக்கில் கடன்கள் வழங்கப்பட்டன. ஆனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குக் கணக்கு தொடங்கக்கூட உத்தரவாதம் தேவைப்பட்டது.

1960 மற்றும் 70-களில் ஏழைகளின் பெயரால் கொண்டுவரப்பட்ட வங்கி தேசியமயமாக்கல் திட்டம் ஏழைகளைச் சென்றடையவே இல்லை. 2014 வரை நாட்டின் பாதியளவிலான மக்கள் வங்கி அமைப்பிற்கு வெளியேதான் வைக்கப்பட்டிருந்தனர். 1985-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஒடிசாவில் பேசுகையில் ‘டெல்லியில் இருந்து அனுப்பப்படும் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைகிறது’ என்று கூறினார். ஆனால், தற்போதைய ஆட்சியில் தொடங்கப்பட்ட 59-60 கோடி `ஜன் தன்’ கணக்குகள் மூலம் டெல்லியிலிருந்து அனுப்பப்படும் முழுத் தொகையும் நேரடியாகப் பயனாளிகளின் கணக்குகளைச் சென்றடைகிறது.

மோடி
மோடி

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமெடுத்து வரும் சூழலில், நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி அமைப்புகளைப் பாதுகாப்பது மிக முக்கியமானதாக மாறியுள்ளது. இன்றைய காலத்தில் ஆயுதங்களை ஏந்திப் போராடும் மரபுசார் போர்கள் மட்டுமன்றி, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களும் போருக்கு நிகரானவையே. இந்தியாவின் பொருளாதார வலிமை அதிகரித்து வரும் சூழலில், நாட்டின் வங்கி அமைப்பையும் டிஜிட்டல் உள்கட்டமைப்பையும் ‘சைபர் பயங்கரவாதிகளிடம்’ இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தச் சூழலில் ஒடிசாவில் திறக்கப்பட்டுள்ள ரிசர்வ் வங்கியின் தரவு மையம் மற்றும் சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனம், நாட்டின் நிதித்துறையின் பாதுகாப்பையும் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் திறனையும் மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link