ஜெயிலர் 2 விமர்சனம் – superstar rajinikanth jailer 2 movie review

ஓய்வு பெற்ற ஜெயிலரான டைகர் முத்துவேல் பாண்டியன்( ரஜினிகாந்த்) தன் மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள் மிர்னா மேனன், பேரன் ரித்விக்குடன் வசித்து வருகிறார். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறார் அவர். ஜெயிலர் படத்தில் சிலை கடத்தல் கும்பலை அழித்தார் முத்துவேல் பாண்டியன். அந்த கும்பலுடன் தொடர்பு வைத்திருந்த தன் மகனை கொலை செய்தார். இந்நிலையில் முதல் பாகத்தில் இருந்த சிலை கடத்தல் கும்பல் பிரச்சனை ஜெயிலர் 2 படத்திலும் இருக்கிறது.

சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டே சிலை கடத்தல் கும்பல் தலைவரை தேடுகிறார் ஜெயிலர். இந்நிலையில் தன் கும்பலை சேர்ந்த வர்மனை(விநாயகன்) கொலை செய்தவரை கண்டுபிடித்து கொல்லத் தேடுகிறார் புது வில்லன் திலீப்(சுராஜ் வெஞ்சாரமூடு). கோவாவில் வசிக்கும் சிலை கடத்தல் கல்பக்ஸ் டான் குடும்பத்தை சேர்ந்த மிதுன் சக்ரபர்த்தி, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் ஆகியோர் தங்கள் பிசினஸ் பாதிக்கப்பட காரணமாக இருந்தவரை தேடுகிறார்கள்.

டைகர் முத்துவேல் பாண்டியன் ரகசியமாக விசாரணை நடத்தியதன் பலனாக திலீப், கோவாவில் இருக்கும் கல்பக்ஸ் குடும்பத்தை கண்டுபிடிக்கிறார். ஈவு இரக்கமே இல்லாத கல்பக்ஸ் குடும்பத்தார், வர்மனுக்காக பழிதீர்க்கத் துடிக்கும் திலீப்பிடம் இருந்து டைகர் முத்துவேல் பாண்டியன் எப்படி தப்பிக்கிறார்?. மகன் பற்றிய ரகசியத்தை குடும்பத்தாரிடம் சொல்லாமல் இனியும் எப்படி இருப்பார் என்று படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
ஜெயிலரில் பார்த்தது போன்றே இருக்கிறார் முத்துவேல் பாண்டியன். எளிமையான உடை, சீரியஸான முகம், அதே கண்ணாடி என ஜெயிலர் லுக் இரண்டாவது பாகத்திலும் இருக்கிறது. மேலும் ஜெயிலரில் வந்தது போன்றே இதிலும் கவுரத் தோற்றத்தில் சிலர் வந்து போகிறார்கள்.
முதல் பாதியில் நெல்சனின் பிளாக் காமெடி தூக்கலாக இருக்கிறது. பந்தா செய்யும் மூர்த்தியாக நடித்திருக்கும் நமோ நாராயணன் வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. பயங்கரமான ஆளான டைகர் முத்துவேல் பாண்டியன் எதுவுமே தெரியாத அப்பாவி போன்று மூர்த்தியிடம் நடந்து கொள்வதை பார்க்கும்போது பாட்ஷா படத்தில் வரும் ஆட்டோக்காரன் ரஜினிகாந்த் கதாபாத்திரம் கண் முன்பு வந்து போகிறது. நமோ நாராயணன், ரஜினி கூட்டணியை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் போதே யோகி பாபு வரவே தியேட்டரில் சிரிப்பு சத்தம் மட்டும் தான் கேட்கிறது.ஜெயிலரின் அடையாளத்தை வில்லன் திலீப் எப்படி கண்டுபிடிக்கிறார் என்கிற சஸ்பென்ஸ் பாராட்டுக்குரியது.

முதல் பாதி ஜாலியாக செல்ல இரண்டாம் பாதியோ சீரியஸாக மாறிவிடுகிறது. ஜெயிலருக்கு டஃப் கொடுக்கிறார்கள் கல்பக்ஸ் ஆட்கள். குடும்பத்தாரை விட்டுக் கொடுக்காத அதிகாரம் படைத்தவர்கள் கல்பக்ஸ். இது ஒரு பக்கம் போக ஜெயிலர் மகன் பற்றிய உண்மை ரம்யா கிருஷ்ணன், மிர்னாவுக்கு தெரிந்துவிடுவோ என்கிற டெஷன் மறுபக்கம். பிரச்சனை பெரிதாக இருந்தாலும் அதை ஜெயிலர் எளிதில் கையாண்டுவிடுகிறார்.
முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாதியின் தாக்கம் குறைவு என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும் படம் திருப்திகரமாக முடிய முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான். ரஜினியை அவர் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க வைத்து ரசிகர்களை கவர்வது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார் இயக்குநர். ரஜினியின் ஆராவை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் நெல்சன். அவரின் வயதை மனதில் வைத்து ரஜினி கையை காட்ட அவரின் நண்பர்கள் வந்து அவர் சார்பில் சண்டை போடுகிறார்கள். ஜெயிலர் 3 வருகிறது என தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது அனிருத் ரவிச்சந்தரின் இசை.

Source link