வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் (எஸ்.எஸ்.ஆர்) தொடங்கப்படவுள்ளன. அதன்படி நவம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பித்தவர்களின் தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து 2027 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் கடந்த 23ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆனால் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் நடந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தவெக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, ஆம் ஆத்மி, தேமுதிக, நாதக ஆகிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (26-10-26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுக, தவெக, காங்கிரஸ், அதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட 13 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சிகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆனால் கூட்டம் தொடங்கிய போது, திமுக மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி இக்கூட்டத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து கையில் பதாகைகளை ஏந்தி வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து இடதுசாரிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆனால் தவெக, பா.ஜ.க அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கட்சியின் நிலைப்பாட்டையும் தங்களுடைய கருத்துகளையும் தெரிவித்தன.
