ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி

-நமது நிருபர்-

கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2024 – 25ம் நிதியாண்டில், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என, 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில், 150க்கும் மேற்பட்டோர், தலா, 25 லட்சம் முதல், 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்து, பணி பெற்றதற்கான விபரங்கள், சோதனையின் போது அமலாக்கத் துறைக்கு கிடைத்தன. பணியிட நியமனங்களுக்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டியது.

இது சம்பந்தமாக, தமிழக டிஜிபிக்கு, அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது. நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி இன்பதுரை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில், நேரு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

பிறகும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனக்கூறி இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இறுதியாக நேரு மீது வழக்குப்பதியப்பட்டது. வழக்கு பதிவு செய்ய தடை கேட்டு முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்தது. நேரு மீது வழக்குப்பதிய தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

மகேஷ் மனு தள்ளுபடி!

அதேபோல், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாக திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரிய மகேஷ் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

ஊழல் வழக்கில் ஒரே நாளில் திமுக முன்னாள் அமைச்சர்கள் நேரு, மகேஷ் ஆகிய இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link