கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழகத்தில் உள்ள 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ₹100 கோடிக்கும் மேல் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர் டி.சி. இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் மற்றும் முத்துக்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சி இல்லங்கள் உட்பட 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், இது தொடர்பாக அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாகப் போலீஸார் தீவிர விசாரணையும் நடத்தினர். அதனைத் தொடர்ந்து அன்பில் மகேஷை நேரில் அழைத்தும் விசாரணை நடத்தினர். இதனிடையே, இந்த விவகாரம் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, இந்த ஊழல் புகாரில் சட்டவிரோதமாக நடைபெற்ற பணபரிவர்த்தனைகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருகின்றன.
இந்த சூழலில் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வேண்டும் அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு வந்த போது அன்பில் மகேஷ் தரப்பில், ‘இந்த வழக்கில் போலீஸின் சம்மனை ஏற்று செப்டம்பர் 18ஆம் தேதி அன்பில் மகேஷ் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அப்போது, 240 கேள்வி எழுப்பப்பட்டு சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தியதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இப்போது 10 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொண்டு இதுவரைக்கும் 7 ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை அவர் சமர்பித்திருக்கிறார். இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் அன்பில் மகேஷ் சாட்சியை கலைக்க மாட்டார், எங்கும் தப்பிச் செல்லமாட்டார். அவர் எப்போது வேண்டுமானாலும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறார், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கெனவே இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் இருக்கிறார்கள். எனவே, அதனை பரிசீலித்து அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிடப்பட்டது. இதையடுத்து காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் என்பவர் தலைமறைவாக இருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் மிக தீவிரமானவை. இதில் 400 கோடி ரூபாய் வரைக்கும் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த சூழலில் அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் வழங்கினால் எதுவும் வெளியே வராது. அதனால் அவரை காவலில் விசாரிக்க வேண்டியுள்ளது. அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி லட்சுமி நாராயணன், இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (26-10-26) மீண்டும் நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு வந்தது. அப்போது நீதிபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன் ஜாமீன் வழங்க முடியாது என்று குறிப்பிட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து, அன்பில் மகேஷ் பொய்யாமொழியை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
