2ம் கட்டமாக நடந்த எஸ்.ஐ.ஆர் 5.18 கோடி வாக்காளர்கள் நீக்கம்

புதுடில்லி;தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, உத்தர பிரதேசம் உள்பட 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடந்த இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பின், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 10.2 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது. உயிரிழந்ததாக 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

பார்லி., மற்றும் சட்டசபை தேர்தலை சுமுகமாக நடத்தும் நோக்கில் நாடு முழுதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இரண்டாம் கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கப்பட்டது.

தமிழகம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளா, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் கோவா என மொத்தம் 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர்., பணிகள் நடந்தன.

தீவிர திருத்தப் பணிக்கு முன்பாக, இந்த 12 மாநிலங்களிலும் மொத்தமாக 50.99 கோடி வாக்காளர்கள் இருந்தனர். உயிரிழந்தோர், இடம் பெயர்ந்தோர், இரட்டை வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தோர் பெயர்கள் அடையாளம் காணப்பட்டதில், 5.18 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இதன் மூலம் 12 மாநிலங்களிலும் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தற்போது 45.81 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இது கடந்த பட்டியலுடன் ஒப்பிடுகையில் 10.2 சதவீத அளவுக்கு சரிவாகும். உயிரிழந்தவர்கள் மட்டும் 66 லட்சத்து 88 ஆயிரத்து 636 பேர் என கண்டறியப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 91 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 12 மாநிலங்களில் இருந்து 51 கோடி வாக்காளர்கள் பெயர்கள் திருத்தப்பட்டுள்ளன. எஞ்சிய 17 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களில், ஐந்து மாநில தேர்தல் முடிந்ததும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் துவங்கவுள்ளன. மூன்றாம் கட்டத்தில் மொத்தம் 40 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்படவுள்ளன.

Source link