தமிழகத்தில் உள்ள கோவில்கள் :
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின் படி, தமிழகத்தில் மொத்தம் 46,341 கோவில்கள் மற்றும் மடங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அவற்றில் 43,677 கோவில்கள், 24 ஜைன கோவில்கள், 45 மடங்கள், 81 மடங்களைச் சேர்ந்த கோவில்கள், 1298 அறக்கட்டளைகள் உள்ளிட்டவைகளும் அடங்கும். இவைகள் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் மட்டுமே. இவைகள் தவிர தனியாருக்கு சொந்தமான கோவில்கள், சிறிய கோவில்கள் என ஏராளமான கோவில்கள் தமிழகத்தில் உள்ளன.
தமிழகத்தில் உள்ள 43,677 கோவில்களில் சுமார் 33,000 க்கும் அதிகமான கோவில்கள் 800 முதல் 5000 ஆண்டுகள் வரை பழமையானவையாக கருதப்படுகின்றன. இருந்தாலும் சில குறிப்பிட்ட கோவில்கள் மட்டுமே அதிகம் பிரபலமானவையாக உள்ளன. அனைத்து கோவில்களிலும் திருவிழா காலங்களிலும், முக்கியமான விசேஷ நாட்களிலும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு கூடுவார்கள் என்றாலும், சில குறிப்பிட்ட கோவில்களில் மட்டுமே வருடத்தின் அனைத்து நாட்களிலும் அதிகமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது.
பக்தர்கள் தரும் காணிக்கைகள் :
கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை வைப்பது உண்டு. தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறி விட்டால் அதற்கு நன்றிக்கடனாகவும், பக்தியின் காரணமாகவும் உண்டியலில் பணம், தங்க மற்றும் வெள்ளி நகைகள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவது உண்டு. இது தவிர கோவிலுக்கு நன்கொடைகள் வழங்குவதும் உண்டு. நேர்த்திக்கடன் எதுவும் இல்லாமலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் தங்களால் முடிந்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்துவது உண்டு.
அப்படி அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ உண்டியல் காணிக்கை உள்ளிட்ட வருமான விபரங்கள் கணக்கிடப்பட்டு, அரசிடம் கணக்குகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் அதிகமாக வருமானம் பெறும் டாப் 10 கோவில்கள் மற்றும் அந்த கோவில்கள் பெறும் வருமானம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த முறையும் பழனி முருகன் கோவில் தான் இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் அதிகம் வருமானம் பெறும் டாப் 10 கோவில்கள் :
டாப் 10 கோவில்கள் வருமான விபரம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ரூ.233.50 கோடி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் ரூ.139.06 கோடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.131.38 கோடி சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி ரூ.111.09 கோடி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் ரூ.74.98 கோடி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ரூ.73.72 கோடி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் ரூ.64.33 கோடி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் ரூ.50.57 கோடி மதுரை கள்ளழகர் கோவில் ரூ.34.20 கோடி ஈரோடு பண்ணாரி அம்மன் கோவில் ரூ.29.16 கோடி
பழனி கோவில் பக்தர்கள் தரிசன விபரம் :
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழும் பழனி தண்டாயுதபாணி கோவிலில் வருடத்திற்கு 1.20 கோடிக்கும் அதிகமான பக்தர்களும், விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான மக்களும், சாதாரண நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்வதாக சொல்லப்படுகிறது.பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 10,000 பேருக்கும் அன்னதானம் வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
Source link
