டெஹ்ரான்:ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் நிலை மற்றும் இருப்பிடம் குறித்த கேள்விகள் அதிகரித்து வரும் நிலையில், வான்வழி தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்., 28ம் தேதி தாக்குதல்களை துவங்கின. முதல்நாள் தாக்குதல்களிலேயே, அந்நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
கமேனிக்கு பின் அவரது மகன் மொஜ்தபா கமேனி, 56, அந்நாட்டின் உச்ச தலைவராக கடந்த மாதம் 8ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. அவருடைய பெயரில் அறிக்கைகளும், வீடியோ, ஆடியோக்கள் வெளியிடப்பட்டன. அவற்றிலும் அவருடைய குரல் கூட இடம்பெறவில்லை.
அயதுல்லா அலி கமேனி மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது, மொஜ்தபா பலத்த காயமடைந்ததாக கூறப்பட்டது. இது குறித்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வெளியிட்ட செய்தியில், மொஜ்தபா உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தன.
இதையடுத்து, மொஜ்தபா கமேனியின் தற்போதைய நிலை மற்றும் இருப்பிடம் குறித்து கேள்விகள், சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், வான்வழி தாக்குதல்களில் மொஜ்தபா கமேனி அடைந்த காயங்கள் குறித்து, ஈரானைச் சேர்ந்த தனியார் செய்தி நிறுவனம் விபரங்களை வெளியிட்டுள்ளது. செய்தி நிறுவனத்துக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, வான்வழி தாக்குதலால் கமேனிக்கு கடுமையான முகக்காயங்களும், ஒன்று அல்லது இரண்டு கால்களிலும் பாதிப்புகளும், அத்தாக்குதல்களில், கமேனியின் முகம் சிதைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் விழிப்புடன் இருப்பதாகவும், முடிவெடுப்பதில் தீவிரமாகவும் ஈடுபட்டு வருவதாகவும் ஈரான் கூறி வருகிறது. மேலும், ஆடியோ கான்பரன்சிங் வாயிலாக உயர்மட்ட கூட்டங்களில் பங்கேற்று வருவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள், தற்போது நடந்து வரும் போர், அமெரிக்கா உடனான பேச்சு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருதாக கூறுகின்றனர். ஆனால், இதுவரை மொஜ்தபாவின் காயங்கள் குறித்து ஈரான் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் அளிக்கவில்லை.
