2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகள் பரிந்துரைக்க தடை

புதுடில்லி: குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள் மீதான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவற்றை பரிந்துரைப்பதை தடை செய்யவும், 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அவற்றை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தாமல் இருக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட, ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் மொத்தம் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்த விவகாரம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மருந்தில், நச்சுத்தன்மை வாய்ந்த, ‘டை எத்திலின் க்ளைகால்’ மற்றும், ‘எத்திலீன் க்ளைகால்’ ஆகிய வேதிப்பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அந்நிறுவனத்திற்கு சீல் வைத்ததுடன், மற்ற இருமல் மருந்துகளும் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இதுதவிர, இருமல் மருந்தை 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதை தடை உத்தரவாக பிறப்பிக்கும் வகையில், டாக்டர்கள் மற்றும் மருந்தாளுனர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவும் முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்திய மருந்தியல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட, ‘இந்திய தேசிய மருந்து பட்டியல் 2026’ வரைவில் தவிர்க்கப்பட வேண்டிய மற்றும் பக்கவிளைவுகள் குறித்த மருந்து தகவல்கள் தரப்படும்.

இதில், ‘2 வயதுக்கு உட்பட்ட குழந்தை களுக்கு இருமல் மற்றும் சளி மருந்துகளை பரிந்துரைக்கவோ வழங்கவோ கூடாது’ என, வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், ‘மருத்துவ பரிசோதனை மற்றும் மேற்பார்வையின்றி 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அவ்வகை மருந்துகளை பரிந்துரைக்க கூடாது’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் இருமல் மருந்தில் உள்ள மூலப்பொருட்களான, ‘கிளசரின், புரோப்பிலீன் கிளைக்கால், சார்பிட்டால்’ உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள துணை பொருட்களுக்கான தரநிலைகளை இந்திய மருந்தியல் ஆணையம் புதுப்பித்துள்ளது.

இதையடுத்து இருமல் மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தயாரிப்புகளை கடும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.

Source link