“தாய்மாமன் சீர் திட்டத்தை அறிவித்த தாய்மாமனையே காணவில்லை” – கனிமொழி ஆவேசம்!

நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி இன்று (26-10-26) சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எண்ணூரில் இரண்டரை வயது குழந்தை தவெக நிர்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அந்த செய்தி வெளியிலேயே வராமல் மூடி மறைப்பதற்கு அரசு முயற்சிக்கிறது. அந்த குழந்தைக்கு இரண்டு ஆபரேஷன் செய்யப்பட்டிருக்கிறது, அந்த அளவுக்கு அந்த குழந்தை மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தவெக நிர்வாகி இதில் குற்றவாளியாக இருப்பதால் அவரை காப்பாற்றுவதற்கு தான் அரசு முனைப்புடன் இருக்கிறது. செஞ்சியில் சிறுமி ஒருவர் காணாமல் போய் கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகிறது. ஆனால் இன்று வரை இந்த அரசு அந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதே போல், ராணிப்பேட்டையில் 1 வயது குழந்தை காணாமல் போய் அவருக்கு என்ன ஆனது என்றே இன்று வரை தெரியவில்லை. மதுராந்தகத்தில் ஒரு பெண் குழந்தை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். திருவண்ணாமலை பகுதியில் 12 வயது சிறுவன் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். இந்த ஆட்சி பொறுப்பிற்கு வந்த பிறகு, பல கொலை சம்பவங்களில், குற்ற சம்பவங்களில், பாலியல் வன்முறைகளில் தவெக நிர்வாகிகள் தான் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். எந்த குற்றங்கள் செய்தாலும் தவெக ஆட்சி தங்களை காப்பாற்றும் என்ற திமிருடன் தெனாவட்டுடன் குற்றங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சி, குற்றவாளிகளை காப்பாற்றுவதில் காட்டக்கூடிய முக்கியத்துவத்தை, பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு காட்டவில்லை. இது நாடா? காடா?

தாய்மாமன் சீர் என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் தாய்மாமனையே காணவில்லை. காப்பாற்ற வேண்டிய தாய்மாமன் எங்கே போனார்? தூங்கிட்டு இருக்காரா? காணாமல் போய்விட்டாரா? என்று தெரியாத ஒரு சூழ்நிலை தான் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால் தயவு செய்து அரசில் இருப்பவர்கள், தான் ஆட்சி பொறுப்பில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும். முக்கியமாக குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், மனசாட்சி இருந்தால் அதையாவது செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.