பலர் தங்களுடைய சேமிப்புத் தொகையை ஃபிக்சட் டெபாசிட் (FD) திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். மொத்தப் பணத்தையும் ஒரே ஒரு ஃபிக்சட் டெபாசிட்டில் போடுவதற்குப் பதிலாக, அவசரத் தேவைகளின்போது பணத்தை எளிதாகப் பெறும் வகையில் வெவ்வேறு காலக்கெடு கொண்ட FD-களாகப் பிரித்து முதலீடு செய்யலாம். நிலையான வட்டி லாபம் பெற விரும்புவோரிடையே ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால், உங்களது மொத்தப் பணத்தையும் ஒரே ஒரு FD-யில் பல ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவிட்டால் திடீரென பணம் தேவைப்படும்போது சிரமத்தை சந்திக்க நேரிடும். ஏனெனில், முதிர்வு காலம் முடிவதற்குள் பணத்தை எடுக்க முயன்றால் வங்கிகள் அபராதம் விதிக்கும்.
இந்தச் சிக்கலைத் தவிர்க்க FD லேடரிங் வசதி பெரிதும் உதவியாக இருக்கும். மொத்தத் தொகையையும் ஒரே FD-யில் முடக்குவதற்குப் பதிலாக, வெவ்வேறு முதிர்வு காலங்களைக் கொண்ட பல சிறிய FD-களாகப் பிரிக்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு FD-யும் வெவ்வேறு காலக்கட்டங்களில் முதிர்ச்சியடையும். தேவைப்படும்போது குறிப்பிட்ட தொகையை மட்டும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள தொகை தொடர்ந்து வட்டி ஈட்டிக்கொண்டே இருக்கும். உதாரணமாக, உங்களிடம் முதலீடு செய்ய ரூ. 5 லட்சம் இருப்பதாக வைத்துக்கொள்வோம். மொத்தத் தொகையையும் 5 ஆண்டு கால ஒரே FD-யில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, தலா ரூ. 1 லட்சம் வீதம் 5 வெவ்வேறு FD-களாகப் பிரிக்கலாம்.
ஒவ்வொரு FD-யின் கால அளவும் வெவ்வேறாக இருக்கலாம். FD காலத்தைத் தேர்ந்தெடுக்கும்போது உங்கள் தேவைகள், வட்டி விகிதங்கள் மற்றும் முதலீட்டு இலக்குகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். 1 முதல் 5 ஆண்டுகள் வரை வெவ்வேறு காலக்கெடு கொண்ட 5 ஃபிக்சட் டெபாசிட்களை நீங்கள் தொடங்கினால், முதல் FD ஒரு வருடத்திற்குப் பிறகு முதிர்ச்சியடையும். அப்போது அசல் தொகையான ரூ. 1 லட்சத்துடன் அதற்கான வட்டியும் உங்கள் கைக்குக் கிடைக்கும். இந்தத் தொகையை நீங்கள் குடும்பச் செலவுகள் அல்லது எதிர்பாராத தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்களுக்கு அந்தப் பணம் உடனடியாகத் தேவையில்லை என்றால், தற்போது நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தின்படி அந்தத் தொகையை மீண்டும் ஒரு புதிய FD-யில் முதலீடு செய்யலாம். இந்த உத்தியின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உங்கள் சேமிப்பு முழுவதும் ஒரே நேரத்தில் நீண்ட காலத்திற்கு முடங்கிவிடாது. வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சியடையும் FD-கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் பணம் கைவசம் கிடைக்கும். அதேபோல, வீட்டைச் சீரமைப்பு செய்வது, குழந்தைகளின் படிப்புச் செலவுகள் போன்ற அவசரத் தேவைகளுக்கு முதிர்ச்சியடையும் FD பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க நேர்ந்தால், வங்கிகளின் அபராத விதிகளை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்வது நல்லது.
அவசரச் செலவுகளுக்குப் பணம் உடனடியாகக் கிடைக்காதபோது பலர் தனிநடன் கடன் பெற முயற்சிக்கின்றனர். அத்தகைய கடன்களுக்கு வட்டி மிக அதிகமாக இருக்கும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப FD முதிர்வு காலங்களை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம், கடன் வாங்கும் நிலையைத் தவிர்க்கலாம். இருப்பினும், அனைத்து அவசரத் தேவைகளுக்கும் FD முதிர்வு காலம் சரியாகப் பொருந்தி வரும் என்று சொல்ல முடியாது. எனவே, எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்க எப்போதுமே ஒரு தனி அவசர நிதியை வைத்திருப்பது புத்திசாலித்தனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Source link
