”விளம்பரம் செய்துகொடுத்த பாஜகவினருக்கு மிக்க நன்றி”; – ராகுல்காந்தி கிண்டல்

தேர்தல் முறைகேடுகள் மற்றும்  வாக்குத்திருட்டுக்கு எதிராக ’இந்தியா’ கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பேரணிக்கு, பிரமாண்டமான விளம்பரம் செய்து கொடுத்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜகவினரைக் கிண்டல் செய்துள்ளார்.  

வருகின்ற நவம்பர் 1 அன்று, டெல்லியில் உள்ள ’ராம் லீலா’ மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. தேர்தல் முறைகேடு மற்றும் வாக்குத்திருட்டுக்கு எதிராக நடைபெறும் இந்த பேரணிக்கு இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் வணிகர்கள் என, ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் அனைவரும் வருகை தாருங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருந்தார்.  

இது குறித்து தனது சமூக ஊடகப் பதிவில், ”எங்கள் வாக்குகள் திருடப்படுகின்றன. இதை நாங்கள் எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டோம். வாக்காளர் பட்டியலிலிருந்து பல கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. விதிகள் மற்றும் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. கேள்வி எழுப்பியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இனி, இந்த நாடு பதிலடி கொடுக்கும்.

நவம்பர் 1 அன்று டெல்லி செல்வோம். ‘வாக்கைக் காப்போம் – நாட்டை மீட்போம்’. மக்கள் பேரணி மற்றும் பிரம்மாண்டக் கூட்டம் நடைபெறுகிறது. மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், வணிகர்கள் என ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரும் வருகை தாருங்கள். வாக்கு உங்களுடையது. போராட்டமும் உங்களுடையதே ராம்லீலா மைதானம், புது டெல்லி” என்று குறிப்பிட்டுள்ளார்.  

இந்த பேரணிக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனிடையே, ”நவம்பர் 1-ம் தேதி என்பது 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் நினைவு தினம்” என்பதால், அந்தத் தேதியில் பேரணி நடத்துவது சீக்கியர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சில ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுக்கே இந்தத் தேதியில் உடன்பாடு இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.  

இந்நிலையில், பாஜகவின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி தரும் விதமாக ராகுல் காந்தி, தனது சமூக வலைதளப் (எக்ஸ்)  பதிவில், ”இந்த நிகழ்வை இவ்வளவு உற்சாகமாக விளம்பரப்படுத்தி, அதன் செய்தியை அதிகமான மக்களைச் சென்றடையச் செய்த பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மனமார்ந்த நன்றி” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த 7 நாட்களுக்கும் இதே உற்சாகத்தைத் தொடருமாறும்  அவர் பதிவிட்டுள்ளார்.